×

மனித- விலங்கு மோதலை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மனித- வன விலங்குகள் மோதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. வனபரப்பு முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி, கூடலூர் வன கோட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனங்களில் அழியும் பட்டியலில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது.

இதுதவிர யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  மேலும் விலையுயர்ந்த மரங்கள் உள்ளிட்டவைகளும் உள்ளன. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை கூடலூர் கோட்டத்தில் மனித - யானை மோதல்களும், நீலகிரி கோட்டத்தில் காட்டெருமை தாக்குதல் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன.


இந்நிலையில் மனிதன் - வன விலங்குகள் மோதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2017ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டெருமை தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

 இந்த ஆண்டில் இதுவரை யானை, காட்டெருமை தாக்குதல்களில் 13 பேர் இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதவிர கரடி, பன்றி போன்றவைகள் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் கூறுகையில், மனித - வன விலங்கு மோதல்களை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக எஸ்.எம்.எஸ்., மூலம் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் அதிகம் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் என கண்டறியப்பட்ட 30 பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 800 பேர் தேர்வு செய்யப்பட்டு யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுகின்றன, என்றனர்.  நீலகிரி வன கோட்டத்தை பொறுத்த வரை ரெபிட் ரெஸ்பான்ஸ் டீம் எனப்படும் அதிவிரைவு படை அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை ஒட்டி நடமாடும் காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அளித்தால் அப்பகுதிக்கு சென்று அவற்றை வனத்திற்குள் விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  முதுமலை புலிகள் காப்பகத்தை பொறுத்த வரை சமீபத்தில் குடிபோதையில் இருந்த ஆதிவாசி ஒருவர், யானை தாக்கி இறந்துள்ளார். இருப்பினும் மனித - வன விலங்கு மோதல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest Department , OOty,Forest Department,Nilagiri District,Human, Forest Animal Fight
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!