×

இலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொலை விடுதலைப் புலி மாஜி துணை தலைவர் கருணா மீது சந்தேகம் : தமிழ் தேசிய கூட்டணி குற்றச்சாட்டு

கொழும்பு: இலங்கையில் 2 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் கருணா மீது சந்தேகம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டணி கட்சி குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வவுனித்தீவில், நேற்று முன்தினம் இரவு  4 போலீசார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு போலீசார் தமிழர். மற்றொருவர் சிங்களர். தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்துள்ள இக்கொலை சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருவதாக, போலீஸ் துறை அமைச்சர் ரஞ்சித் மதுமா பந்தரா கூறி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய தமிழ் தேசிய கூட்டணி செய்தித் தொடர்பாளர் சுமந்திரன், ‘‘போலீசார் கொலையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் கருணா அம்மானுக்கு தொடர்பிருக்கலாம்’’ என பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த 2010-2015 வரை ராஜபக்சே ஆட்சியில் துணை அமைச்சராக பதவி வகித்தவர் கருணா அம்மான். அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார். கடந்த மாதம் 26ம் தேதி, இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதில் இருந்து, அதைப் பற்றி கருணா தீவிரமாக பேசி வருகிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த மாதம் 26ம் தேதிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற அவர்கள் மீது மிகுந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றபின் அவரின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானாந்தா தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணப் பகுதியில் பல்வேறு அச்சுறுத்தல்களை விளைவிக்க முயன்றார். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபக்சேவுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பு பற்றி புரளி


இலங்கையில் பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் பெரியளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கருணா தீவிர கருத்துகளை பகிர்ந்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தர, தமிழ் கட்சி தலைவர்களை இழுக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறவில்லை. மேலும், இலங்கை அரசியலில் ராஜபக்சேவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதற்காக, மீண்டும் விடுதலைப் புலிகள் புத்துணர்ச்சி பெற்று விட்டதாக பல்வேறு தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், கருணா மீது தமிழ் கட்சிகள் சந்தேகத்தை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களுக்கும் தடை

இலங்கையில் ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. ஆனால், ராஜபக்சே அரசுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், தற்போது எந்த அரசும் பதவியில் இல்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் அரசு நிதியை பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அரசு நிதியை பயன்படுத்த முடியாத நிலைக்கு ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் அரசு நிதியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் நேற்று மற்றொரு தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அந்த தீர்மானமும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamils ,council suspect , Two Tamils shot dead ,Srilanka ,Tamil Tiger council suspect
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை