×

மின்விளக்கு வசதியில்லாததால் கும்மிருட்டில் நான்கு வழிச்சாலை : அதிகரித்து வரும் விபத்து

திருமங்கலம்: திருமங்கலம் தோப்பூரிலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரன்பட்டி வரை நான்குவழிச்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலை திருநகரை அடுத்துள்ள தோப்பூரிலிருந்து திருமங்கலம் வழியாக விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரன்பட்டி வரை திருமங்கலம் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் வருகிறது. ஆனால் இந்த 25 கி.மீ. துாரத்தில் எந்த இடத்திலும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் நான்குவழிச்சாலை முழுவதும் கும்மிருட்டாக உள்ளது.

வாகனங்கள் போட்டி போட்டு செல்லும் நான்குவழிச்சாலையில் விளக்குகள் இல்லாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள், சைக்கிளில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் போலீசார் வைத்துள்ள பேரிகார்டுகள் இருப்பது மின்னல் வேகத்தில் வரும் வாகனோட்டிகளுக்கு லைட்வெளிச்சம் எதுவுமில்லாததால் அருகே வந்தபின்பு தான் தெரிகிறது. அதற்குள் அவர்கள் பேரிகார்டில் மோதி விபத்தில் சிக்குவது அதிகரிக்கிறது.

எனவே நான்குவழிச்சாலையில் தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். கப்பலுார் டோல்கேட், கப்பலூர் மேம்பாலம் ஆகிய குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தெருவிளக்குகள் அமைந்துள்ளன. தோப்பூர், கப்பலூர் காலனி, திருமங்கலம் குதிரைசாரிகுளம், செங்குளம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, மையிட்டான்பட்டி விலக்கு, ஆவல்சூரன்பட்டி விலக்கு உள்ளிட்ட எந்த பகுதியிலும் தெருவிளக்குகள் இல்லை. எனவே இந்த பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pedestrians ,jail ,accident , Four Pavilion, Electricity Facility
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!