×

உளுந்தூர்பேட்டை அருகே பலத்த மழையால் உயர் மின் கோபுரம் சாய்ந்தது 50 கிராமங்கள் இருளில் மூழ்கின

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே உயர்மின் கோபுரம் சாய்ந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து 50 கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் குறுக்குரோடு பகுதியில் உயர்மின்அழுத்த உயர் கோபுரங்கள் தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வந்ததால் உயர்கோபுரத்தை பாதுகாக்கும் தாங்கு கம்பங்கள் பொருத்தப்படாததால் நேற்றிரவு திடீரென உயர்மின் கோபுரம் பூமியில் உள்வாங்கி சாய்ந்தது. இந்த கம்பம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆசனூர் மற்றும் சாத்தனூர் பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களுக்கு செல்லும் மின்கம்பங்களின் மீது சாய்ந்தது. இதனால் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

அந்த கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், குடிநீர் மோட்டார் உள்ளிட்ட மின்சாதங்களை பயன்படுத்த முடியவில்லை. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர. அப்போது மின்கம்பிகளில் ரிட்டன் சப்ளை காரணமாக மின்வாரிய ஊழியர் சந்திரராயன், துலுக்காணம், முனுசாமி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள், மேற்கண்ட 3 பேரையும் காப்பாற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மின்கம்பி சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Ulundurpet , The high tower was drowned in darkness, heavy rain
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்