×

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு மனுவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. இதில் சுமார் 5ஆயிரத்து 912 கோடி மதிப்பில் தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க உள்ள இந்த அணையின் மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவு செய்து, அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

இதில் முதலாவதாக அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கைக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரியின் குறுக்கே எந்தவித புதிய அணைகளையும் கட்ட தமிழகம், கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,government ,Supreme Court ,dam ,Meghadad ,Center , Supreme Court, Meghatad Dam, Central Government, Tamil Nadu Government, Water Authority
× RELATED போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு...