×

தொடர்மழை எதிரொலியாக உற்பத்தி நிறுத்தம் : ஒரு லோடு செங்கல் ரூ.30 ஆயிரம், வீடு கட்டுவோருக்கு இரட்டிப்பு செலவு

மானாமதுரை: தொடர்ந்து மானாமதுரை பகுதியில் மழை பெய்து வருவதால் செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்ட தொழிலாளிகள் விவசாய பணிகளுக்காக சென்றதால் செங்கலுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லோடு ரூ.30 ஆயிரத்தை தொட்டதால் வீடு கட்டுவோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 40க்கும் அதிகமாக செங்கல் தயாரிக்கும் சேம்பர்கள் உள்ளன. இங்குள்ள சேம்பர்களில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.  பருவமழை துவங்கியதை அடுத்து இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை பொருத்தமட்டிலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் இப்பகுதியில் சராசரியாக 16 மி.மீ. மழையே பெய்துள்ளது. அதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை.

ஆனால் மற்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் மானாமதுரை பகுதியில் கடந்த வார இறுதியில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. மழை காரணமாக கட்டுமானப்பணிகளுக்கு செங்கல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் செங்கல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெரியளவில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு மட்டும் இருப்பு வைத்துள்ள செங்கற்களை தயாரிப்பாளர்கள் விற்றுவருவதால் சிறிய பணிகளுக்காக தேவைப்படும் செங்கற்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மூவாயிரம் செங்கல் ரூ.30 ஆயிரத்திற்கு சென்றுள்ளதால் வீடுகட்டுவோர் கலக்கமடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை ஒரு லோடு செங்கல் ரூ.18 ஆயிரத்திற்கு விற்ற நிலையில் தற்போது 30 ஆயிரத்திற்கு சென்றுள்ளதால் கட்டுமானபணிகள் முடங்கி வருகின்றன. இதுகுறித்து சேம்பர் தொழிலாளி ராக்கு கூறுகையில், ‘சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி (செப்டம்பர்) மாத இறுதியில் மழைக்காலம் துவங்கியதும் பணிகளை நிறுத்தி விடுவோம். மழைக்காலத்தில் வெளிமாவட்ட தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விவசாயபணிகளில் ஈடுபடுவர். மேலும் இங்கு தொடர்ந்து மழை பெய்தால் செங்கல் அறுப்பது, உலர வைப்பது, சூளையில் இடுவது உள்ளிட்ட வேலைகளில் சுணக்கம் ஏற்படும், வேலையும் இரண்டு முறை செய்வது கடினம் என்பதால் தை (ஜனவரி) மாத துவக்கத்தில்தான் மீண்டும் உற்பத்தி செய்ய வருவோம்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : eHouse Echoes: A Load Brick ,Homes Builder , Rain, brick, house
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...