×

ராமர் கோயில் கட்ட நாடு முழுவதும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி: விஎச்பி திட்டம்

லக்னோ: தர்ம சபா நிகழ்ச்சியை அடுத்து ராமர் கோயில் கட்டுவதற்காக உறுதி ஏற்கும் நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்த டிசம்பர் 18ம் தேதி முதல் ஒரு வார காலம் நடத்த விஸ்வ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி தொடர்பான அறிவிப்பை நீதிமன்றம் உடனடியாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த 25ம் தேதி  தர்மசபா என்ற பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இந்த பேரணிக்கு ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம், சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த உத்வேகத்தை தொண்டர்கள் இடையே தொடர்ந்து தக்கவைக்கும் வகையில், ராமர் கோயில் கட்டுவதற்கான உறுதி ஏற்கும் நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்த விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) திட்டமிட்டுள்ளது. இந்த ஒரு வார கால உறுதி ஏற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 18ம் தேதி கீதா ஜெயந்தி அன்று தொடங்குகிறது.

இது குறித்து விஎச்பி மண்டல செயலாளர் போலேந்திரா கூறுகையில், ‘‘ராமர் கோயில் கட்டுவதற்காக உறுதி ஏற்பு நிகழ்ச்சி கீதா ஜெயந்தி என்று தொடங்கி சுமார் ஒரு வாரம் நடைபெறும். இது தவிர நாடு முழுவதும் பல இடங்களில் தர்ம சபா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம் 18ம் தேதி வரை சிறிய அளவிலான தர்ம சபா நிகழச்சிகள் மாவட்ட அளவில் நடைபெறும்’’ என்றார். அயோத்தியில் உள்ள விஎச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், ‘‘தர்ம சபா போன்ற நிகழ்ச்சிகள் டெல்லியில் டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில், கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் தர்ம சன்சாத் நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம். இதில் நாடு முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாமியார்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ராமர் கோயில், பசு பாதுகாப்பு, கங்கை ஆறு, சமூக நல்லிணக்கம் ஆகியவை  உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். தர்ம சபா நிகழ்ச்சி மூலம், அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோயிலை கட்ட இந்து சமூகம் விரும்புகிறது என்ற தகவலை தெரிவிக்க முடியும்’’ என்றார்.   



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ramar Temple, VHP Project
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்