×

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: பேட்டிங்கில் இந்தியா அசத்தல்: கோஹ்லி, பிரித்வி உட்பட 5 பேர் அரைசதம்

சிட்னி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், கேப்டன் கோஹ்லி, பிரித்வி ஷா உள்ளிட்ட 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடிக்க இந்தியா நல்ல தொடக்கம் கண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் அடுத்த மாதம் 6ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இத்தொடருக்கு பயிற்சி பெறும் வகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது. சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியின் முதல் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, கே.எல்.ராகுல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடர்ந்து ஏமாற்றமளித்து வரும் ராகுல் வந்த வேகத்தில் வெளியேறினார். அவர் 3 ரன் எடுத்த நிலையில் கோல்மேன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும், அடுத்த வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இளம் வீரர் பிரித்வி ஷா-புஜாரா இணைந்து நல்ல தொடக்கத்தை தந்தனர்.

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 52 பந்தில் 8 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார்.  இவர் 11 பவுண்டரிகளுடன் 66 ரன் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், புஜாரா, கேப்டன் கோஹ்லி இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம் பார்த்தனர். கோஹ்லி சிறப்பான ஷாட்களுடன் பவுண்டரிகளை விளாசினார். 83 பந்தில் அரைசதம் அடித்த புஜாரா, 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கோஹ்லி 78 பந்தில் அரைசதத்தை அடித்தார். அவர் 1 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 87 பந்தில் 64 ரன் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஹாரி, ரகானே இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர். ரகானே 56 ரன் எடுத்து, அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.

விஹாரி 53 ரன்னில் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் ஷர்மா தனது வழக்கமாக அதிரடியில் 55 பந்தில் 40 ரன் விளாசி ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அஷ்வின், முகமது ஷமி இருவரும் ஹார்டில் பந்தில் டக் அவுட்டாகினர். உமேஷ் யாதவ் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டனார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 92 ஓவரில் 358 ரன்களுடன் முடிந்தது. ரிஷப் பன்ட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களுடன் உள்ளது. இன்றும் 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

ஷார்ட்சால் சர்ச்சை
நேற்றைய போட்டியில் டாஸ் போடும் போது, கோஹ்லி வழக்கமான வெள்ளை சீருடையில் வராமல் ஷார்ட் அணிந்தபடி மைதானத்திற்கு வந்தார். இது, எதிரணியை அவமதிக்கும் செயலாக சமூக வலைதளத்தில் பலரும் கோஹ்லிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cricket Australia ,India ,Kohli ,Prithvi , Australia team, India, Kohli, Bridvi
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!