×

பயிற்சியாளருடனான மோதல் விஸ்வரூபம்: என் தேசப்பற்றை சந்தேகிக்கிறார்கள்: டிவிட்டரில் மித்தாலி ராஜ் உருக்கமான பதிவு

புதுடெல்லி: பயிற்சியாளர் ரமேஷ் பவாருடனான மோதல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ், ‘என் தேசப்பற்றை சந்தேகிக்கிறார்கள். இது என் வாழ்வின் கருப்பு தினம்’ என டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜூக்கும், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் மித்தாலி ராஜ், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.

அப்போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், மித்தாலியை அணியில் சேர்க்காதது சர்ச்சையாகியும் உள்ளது. பயிற்சியாளர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாகவும் மித்தாலி பரபரப்பு குற்றம்சாட்டினார். மேலும், பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜியிடம் புகார் செய்தும் அவர் தனக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டதாக மித்தாலி பிசிசிஐக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவார், பிசிசிஐயிடம் உலககோப்பை தொடர் குறித்து 10 பக்க அறிக்கையை நேற்று முன்தினம் கொடுத்தார்.

அதில் 5 பக்கங்கள் மித்தாலி ராஜை பற்றியே இருந்தது. அறிக்கையில், ‘மித்தாலி ராஜ் அணியின் நலனுக்காக விளையாடவில்லை. அவரது சொந்த நலனிலேயே குறியாக இருந்தார். அணியின் கூட்டு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லை. துவக்க வீராங்கனையாக களமிறக்க வேண்டுமென கட்டாயப்படுத்தினார். இல்லாவிட்டால், ஓய்வு பெறுவதாக அறிவித்துவிடுவேன் என மிரட்டினார். அவர் மெதுவாக ரன் சேர்ப்பது, அணியின் மற்ற வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரை இறுதியில் அவரை அணியில் சேர்க்கவில்லை’ என பவார் கூறியிருந்தார்.

இந்நிலையில், மித்தாலி ராஜ் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘என் மீதான அவதூறுகளால் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.  பெரும் ஈடுபாட்டுடன் கடந்த 20 ஆண்டுகாலமாக நாட்டுக்காக   விளையாடி வருகிறேன். இதற்கான எனது கடின உழைப்பு, வியர்வை வீணாகி உள்ளது. இன்று, எனது தேசப்பற்று சந்தேகிக்கப்படுகிறது. இது எனது வாழ்வின் கருப்பு தினம். இதை எதிர்கொள்ள கடவுள் எனக்கு பலத்தை தர வேண்டும்’’ என உருக்கமாக கூறி உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,trainer ,Mithali Raj , Mithali Raj
× RELATED மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும்...