×

மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு: திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைகோ நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர், திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை 5.55 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்பி, ஐ.பெரியசாமி, மதிமுகவை சேர்ந்த டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஜீவன் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்களின் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் வெளியில் வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: 7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்றம், மாநில அரசு முடிவு செய்யலாம் என்று அறிவித்த பின்பும் கூட அவர்களின் விடுதலையை கவர்னர் தாமதப்படுத்தி வருகிறார். 3 மாணவிகளை உயிரோடு கொளுத்தியவர்களை விடுதலை செய்கிறார். இதற்காகவே அவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இந்த 3 மாணவிகள் பிரச்னையில் முன்பகை எதுவும் இல்லை என்று தவறான விளக்கம் தருகிறார். உச்ச நீதிமன்றம் அறிவித்த உடனே கவர்னர்  விடுதலை செய்திருக்க வேண்டும்.

விடுதலை செய்யாதது நீதிமன்ற அவமதிப்பாகும். கவர்னர் போட்டி அரசு நடத்துகிறார். இவர் இங்கே இருக்கக் கூடாது. அவரை வெளியேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் முற்றுகை ேபாராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கு 70 அமைப்புகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உடனே ஆதரவளித்து மறு நாளே கடிதம் அனுப்பினார். இதற்கிடையே எனது நண்பர் துரைமுருகன் நாங்கள் கூட்டணியில் இல்லை என்று கூறியதால் அதுபற்றி திமுக தலைவரே விளக்கம் கூறட்டும் என்றேன். திமுக தலைவர் எங்களுக்கு பதில் கடிதம் அனுப்பியதே விளக்கம் தான். எப்படியாவது திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். நான் விரக்தி அடைந்ததாக கூறுகிறார்கள். அதிமுக அரசு மத்திய அரசின் கங்காணியாக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட நான் 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அப்போது தலையில் கல்லை போட்டு விட்டார்கள். இந்த அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு மட்டும் போட்டார்கள். அதை கொள்கை முடிவாக அறிவிக்கவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானமாகவோ அல்லது அமைச்சரவை முடிவாகவோ அறிவிக்கவில்லை. இப்போது அந்த பசுமை தீர்ப்பாய குழு அறிக்கை தர இருக்கிறது.

இதற்கு காரணம் அரசு முறைப்படி செய்யாதது தான். வரும் 7ம்தேதி இந்த விசாரணை வர இருக்கிறது. நான் அன்றைய தினம் நீதிமன்றம் செல்வேன். நான் யார் என்பதை காட்டுவேன். நான் சிறைக்கு அஞ்சுபவன் அல்ல. அஞ்சவும் மாட்டேன். எங்கள் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தந்துள்ளது. 2004ல் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற எப்படி பாடுபட்டேனோ அதேபோன்று வர உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெற பாடுபடுவேன். திராவிட  இயக்கத்துக்கு ஆபத்து என்றால் என்னால் பொறுத்து கொள்ள முடியாது. ஏனென்றால் நான் அண்ணா, கலைஞரின் வார்ப்பு. 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வந்தாலும் திமுக அனைத்திலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி கவிழும். திமுகவுக்கு அதிக அளவில் ஆதரவு என்பதை கணிப்புகள் காட்டுகின்றன.  எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘தமிழக அரசின் நிர்வாக தோல்வி’
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கட்டப்படவிருக்கும் புதிய அணையை எதிர்த்து நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, திமுக சார்பில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால், முறையாக அணுகாத காரணத்தால் தான் இந்தப் பிரச்சினை இப்போது வந்திருக்கிறது. இதுகுறித்து  விவாதிக்க இருக்கிறோம். எங்களுடைய கூட்டணியிலே இவ்வளவு அக்கறை எடுத்து பேசிப்பேசியே எங்களுக்கு விளம்பரம் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள். அதற்காக ஊடகத்துறைக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Vaiko ,MK Stalin , Vaiko, MK Stalin, DMK,
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...