×

9.5 கி.மீ. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 437 கேமரா அமைப்பு சென்னையில் குற்றங்களை தடுக்க அனைத்து சாலைகளிலும் சிசிடிவி கேமரா

* போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தகவல்

சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து சாலைகளிலும் ஒவ்வொரு 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளில் குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கண்டறியவும் மற்றும் சாலை விபத்துகளை கண்காணிக்கவும் சென்னை காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். குறிப்பாக, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராத தொகையை பணமாக பெற்று வந்தனர். தற்போது அந்த நடைமுறையை ஒழித்து பணமில்லா பரிவர்த்தனை மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் நடைமுறையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து துறையில் அறிமுகப்படுத்தினார். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 31,802 கடைகள் மற்றும் 15,345 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வசதியுள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, போக்குவரத்து காவல் துறை சார்பில் சென்னையின் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் முத்துசாமி பாலம் (ஈகா திரையரங்கம்) சந்திப்பு முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான சுமார் 9.5 கி.மீ. சாலையில் 437 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் சந்திப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர் அன்பு, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 9.5 கி.மீ. தொலைவுக்கு 437 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும். இன்று தொடங்கப்பட்டதில் 88 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நேரடியாக கண்காணிப்பில் இருக்கும்.

அடுத்தகட்டமாக போக்குவரத்து கிழக்கு மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலை, ஆர்.ேக.மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் இதுவரை 60 சதவீதத்திற்கு மேல் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலம் ரவுடியிசம் மற்றும் தவறாக நடக்க கூடியவர்கள் கண்காணிக்கப்படுவதால் பெரும் அளவு சென்னையில் அனைத்து குற்றங்களும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் கண்காணிப்பில் இருப்பதால் குற்றவாளிகள் எளிமையாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரின் உழைப்பு மற்றும் பொதுமக்கள் ஆதரவு இருப்பதால் குற்றங்களும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : highway ,crimes ,CCTV ,Poonamalle ,roads ,Chennai , Poonamalle highway, CCTV camera, crimes, Chennai
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!