×

ரயில்வே கால அட்டவணையில் 2 முறை அறிவித்தும் கிடப்பில் போடப்பட்ட அந்தியோதயா ரயில் இயக்கம்

நெல்லை: ரயில்வே கால அட்டவணையில் கடந்த இரு ஆண்டுகளாக இடம் பெற்ற செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா பகல் நேர தினசரி ரயிலை விரைந்து இயக்கவேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். இந்தியாவில் ஏழைகளும் பயன்பெறும் விதத்தில் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு கட்டணம் இன்றி, அனைத்து பயணிகளும் சாதாரண கட்டணத்தில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு இரு அந்தியோதயா ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயில் அறிவிக்கப்பட்டப்படியே இயக்கப்பட்டு வருகிறது.

செங்ேகாட்டை- தாம்பரம் அந்தியோதயா ரயில் கடந்த இரு ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டும் இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. கொல்லம்- தாம்பரம் ரயிலும் இயக்கப்படுகிறது. இதில் பொதிகை மட்டுமே தினசரி ரயிலாகும்.தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் பொதிகை ரயில்தான் கூடுதல் வருவாயை பெற்று தருகிறது. நெல்லை மேற்கு பகுதி, விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதியை சேர்ந்த பயணிகள் இந்த ரயில் மூலம் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இந்த ரயிலில் காத்திருப்போர் பட்டியலை கணக்கில் கொண்டு அந்தியோதயா ரயிலை விரைந்து இயக்கவேண்டும் என்பது பயணிகளின் விருப்பமாகும்.

செங்கோட்டை- தாம்பரம் மார்க்கத்தில் அந்தியோதயா ரயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னோட்டம் அடிப்படையில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வேக்கு நல்ல வருவாய் கிட்டியது. இருப்பினும் பெட்டிகள் பற்றாக்குறையை காரணம் காட்டி அத்திட்டத்தை ரயில்வே கிடப்பில் போட்டுவிட்டது.இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘செங்ேகாட்டை- தாம்பரம் அந்தியோதயா இரு ரயில்வே பட்ஜெட்டிலும் இயக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

நெல்லை மேற்கு மாவட்ட பயணிகளுக்கு பகல் நேரத்தில் சென்னை செல்ல ஒரு ரயில் தேவை. இதன் மூலம் ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அந்தியோதயா ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகாசி உள்ளிட்ட பகுதி மக்களும் இந்த ரயிலை அதிகளவில் பயன்படுத்த முன்வருவர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Railway, railway timetable, Andiotaya train
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...