×

ராணுவ வீரர்களின் நலன் காக்ககோரி இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றும் வாலிபர்

நெல்லை: ராணுவ வீரர்களின் நலனுக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றும் வாலிபர் நேற்று நெல்லை வந்தார். கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பீமா சங்கர்(32). காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நாட்டை காக்க வெயிலிலும், மழையிலும் பாடுபடும் ராணுவ வீரர்களின் நலன் காக்கவும், அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி இவரது பயணத்தை கர்நாடகாவில் சிறப்பு படை எஸ்.பி. லட்சுமி பிரசாத் தொடங்கி வைத்தார். டெல்லி, ராய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் என பல நகரங்களுக்கு சென்ற இவர் சென்னை வழியாக நேற்று நெல்லை வந்து சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் இதுவரை 10 ஆயிரம் கி.மீ தூரம் சைக்களில் பயணித்துள்ளேன். 84 நாட்கள் சைக்கிளில் பயணித்து நெல்லை வந்துள்ளேன். இன்னமும் 36 நாட்கள் பயணிக்க வேண்டியதுள்ளது. கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவா வழியாக மும்பை செல்ல உள்ளேன். நமக்காக எல்லையில் பாடுபடும் ராணுவத்தினரின் தியாகம் குறித்தும், ராணுவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை பாதுகாக்க கோரியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதற்கான மத்திய அரசின் இணையதள முகவரியையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன்’’ என்றார். சைக்கிள் பழுதானால் அதை பழுது நீக்கும் அனைத்து உபகரணங்களையும் இவர் கையோடு எடுத்துச் செல்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : personnel ,Army ,cyclist ,India , India, bicycles, youth
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!