×

நாகையில், பள்ளத்தில் சிக்கி நின்ற லாரியில் இருந்து நிவாரண பொருட்களை அள்ளிய இளைஞர்கள் 8 பேர் கைது

கீழ்வேளூர்: நாகையில், பள்ளத்தில் சிக்கி நின்ற லாரியில் இருந்து நிவாரண பொருட்களை கிராமமக்கள் அள்ளி சென்றனர். இதுதொடர்பாக, 8 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல கிராமங்களில்  நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். நிவாரண பொருட்களை  எதிர்பார்த்து பசியும், பட்டினியுமாக காத்திருக்கின்றனர். சாலையில்  நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சாப்பிட ஏதாவது  இருக்கிறதா என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்றனர். பசி கொடுமையால் நிவாரண பொருட்களை அபகரிக்கும் நிலை 2 நாட்களாக பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர்  மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை பகுதியை  சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். காங்கிரஸ் வட்டார தலைவர். இவர் கஜா புயலால்  பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக அரிசி, புடவை, லுங்கி, துண்டு, போர்வை  ஆகியவற்றை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வரவழைத்து தனது குடோனில்  வைத்திருந்தார். இதனையறிந்த சிலர் நேற்று முன்தினம் இரவு  11 மணியளவில்  அங்குவந்து, நிவாரண பொருட்களை அள்ளிச்சென்றனர். அதை தடுத்தவர்களையும்  தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

வேலூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் நிவாரண பொருட்களை ஏற்றி  நாகைக்கு அனுப்பினார். லாரியை காட்பாடியை சேர்ந்த சாந்தகுமார் (35) ஓட்டினார். நேற்று காலை இந்த லாரி நாகை மாவட்டம் நீலப்பாடி அருகே வந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி நின்று விட்டது. இந்நிலையில் பள்ளத்தில் லாரி சிக்கியிருப்பதை பார்த்து சிலர் ஓடி வந்தனர். லாரி நிறைய நிவாரண பொருட்கள் இருப்பதை பார்த்தனர். ஏற்கனவே பசியுடன் இருந்த அவர்கள் திடீரென லாரியில் ஏறி 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் மற்றும் நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு  சென்று விட்டனர். இதுபற்றி, கீழ்வேளூர் காவல் நிலையத்தில் சாந்தகுமார் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், லாரியில் இருந்த அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை எடுத்து சென்ற  8 பேரை கைது செய்து பொருட்களை மீட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagam , Relief materials, arrested
× RELATED கிருஷ்ணசாமி ‘இரட்டை இலை சின்னத்தில்...