×

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஒரு வாரத்தில் இடைக்கால நிவாரணம்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கஜா புயல் பாதிப்பு குறித்த மத்திய குழுவினர் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்யவும், இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு ஒரு வாரத்தில் வழங்கவும் ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ‘‘கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சத்துடன் அரசு வேலை, காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம், தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு: கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் 64,978 வீடுகள் முழுமையாகவும், 30,352 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய அரசு உதவியுடன், பல்நோக்கு வசதிகள் கொண்ட குடியிருப்புகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வீடுகளின் மேற்கூரை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான அளவு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்தில் மின் இணைப்பு:  1,23,348 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட கிராமப்பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பெறவேண்டும். முழுமையாக மின் இணைப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும். பால், பிரட் உள்ளிட்ட அடிப்படை தேவைகள், அனைத்து கிராமப்பகுதிகளிலும் வழங்கப்பட ேவண்டும். பன்றிக்காய்ச்சலை தடுக்க: கிராமப்பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், போலீசார் துணையுடன் கொண்டு செல்லப்பட வேண்டும். மண்ணெண்ணெய் அடுப்புகளை வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது. மின் இணைப்பின்றி உள்ள பகுதிகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவாமல் தடுக்க இலவசமாக கொசு வலைகளை வழங்க வேண்டும். கிராமப்பகுதிகளில் கூடுதலாக நிவாரண முகாம்களை ஏற்படுத்தி, பாகுபாடின்றி அனைவருக்கும் உணவு பொருட்கள், ஆடைகள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும். தாலுகா அளவில் டிஆர்ஓ, கிராம அளவில் தாசில்தார்களை கொண்டு நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

டேங்கர் லாரிகளில் குடிநீர்: டேங்கர் லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை பொது சமையலறை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சாலை சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும். அரசு பஸ்களில் நிவாரண பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பெண்களுக்கு நாப்கின்: சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு நாப்கின் வழங்க வேண்டும். உணவு தயாரிக்கும் பணியில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களை பயன்படுத்தலாம். சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். தென்னையை  வெறும் மரம் என கணக்கிடாமல், அவற்றின் அறுவடை மற்றும் எதிர்கால பலனை கருத்தில் கொண்டு இந்தத் ெதாகையை ரூ.2 ஆயிரம் என அதிகரித்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் கெடுவை நீட்டிக்க வேண்டும்: நீட் ேதர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜாவால் அதிகம் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் நலன் கருதி கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை செயலர்கள், சிபிஎஸ்இ மூலம் எடுக்க வேண்டும்.

திறந்த மனதுடன் நிதியுதவி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் செய்ததை போல, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும். கஜா பாதிப்பிற்குரிய நிவாரண உதவிகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் முறையீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படியும், நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையிலும் தேவையான நிதியுதவியை மத்திய அரசு திறந்த மனதுடன் வழங்க வேண்டும். மத்தியக்குழுவின் ஆய்வு முடிந்ததும் தங்களது ஆய்வு இடைக்கால அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அதன்படி, இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு வழங்க வேண்டும். படகுகளுக்கு ரூ.10 லட்சம்: பேரிடர் நிவாரணத்தின் கீழ் இயந்திர படகுகளுக்கு ரூ.10 லட்சம், வல்லத்திற்கு ரூ.1.50 லட்சம், கட்டுமரத்திற்கு ரூ.65 ஆயிரம் மத்திய அரசு மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாதிப்புகளுக்குரிய நிவாரணங்களை உயர்த்தி வழங்க வேண்டும். பாதிப்புக்குரிய நிவாரண அளவை அதிகரிக்க வேண்டும். மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய, மாநில பேரிடர் மேலாண் கமிஷனர்கள் டிசம்பர் 5ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட் கிளை சொல்வது என்ன?
* புயல் பாதித்த பகுதிகளில்  1 வாரத்துக்குள் மீண்டும் மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டும்.
* டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவாமல் தடுக்க இலவசமாக கொசு வலைகளை வழங்க வேண்டும்
* இயல்பு நிலை திரும்பும் வரை பொது சமையலறை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
* அறுவடை மற்றும் எதிர்கால பலனை கருத்தில் கொண்டு தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.2000 வழங்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kajan ,storm ,Tamil Nadu , gaja storm, Tamil Nadu, Interim relief, federal government, court
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...