×

புரோ கபடியில் கலக்கும் தமிழக நடுவர்கள்

புரோ கபடியில் விளையாடும் பெரும்பான்மையான அணிகளில் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் பலர் தவிர்க்க முடியாத வீரர்களாக உருவெடுத்துள்ளனர். இப்படி வீரர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தை சேர்ந்த நடுவர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் நமது நிருபரிடம் தங்கள் கபடி வாழ்க்கையை பகிர்ந்து கொண்டனர்.  சுந்தரராஜ் தங்கசாமி: சொந்த ஊர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகில் உள்ள வெள்ளக்கோவில். எங்கள் ஊரில் எப்போதும் கபடிதான் முக்கிய விளையாட்டு. அதனால் கபடி விளையாட ஆரம்பித்தேன். பள்ளி, கல்லூரி, மாவட்ட அளவில் விளையாடி இருக்கிறேன். உடற்பயிற்சி கல்வியில் மேற்படிப்பு படித்தேன். கபடி களத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக நடுவராக முடிவு செய்தேன். தமிழ்நாடு கபடி சங்க தலைவர் சோலை ராஜா, பொதுச் செயலர் ஷபியுல்லா  ஆகியோரின் வழிகாட்டுதலில் அதற்கான படிப்பும், பயிற்சியும் முடித்தேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்த நடுவர் பணி, 2015லிருந்து  புரோ கபடியில் தொடர்ந்தது. அந்த அனுபவத்தால் 2016ல்  உலகோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டி, 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி நடுவராக பணியாற்றியுள்ளேன். இப்போது மந்திரமூர்த்தி மேனிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

புரோ கபடி மூலம் வீரர்களுக்கு மட்டுமல்ல  எங்களுக்கும்  அடையாளம் கிடைத்துள்ளது. சந்தியா காமராஜன்:  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பெரியபுதூர் தான்  எனது சொந்த ஊர்.  நாங்கள் சகோதரிகள் 4 பேரும் கபடி வீராங்கனைகள். பெண்கள் என்பதால் விளையாட, படிக்க எந்த தடையும் இருந்ததில்லை. அப்பா ராணுவ வீரர் என்பதால் எப்போதும் எங்களை ஊக்குவித்தே வந்தார். நான் ஒன்பதாவது படிக்கும்போது தான் பள்ளியில் கபடி விளையாட ஆரம்பித்தேன். ஆக்சிலியம் கல்லூரி பயிற்சியாளர் பாரதிதாசன் எங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். பின்னர் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாடி உள்ளேன். அதுவும் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக விளையாடினேன். எனது கணவர் கதிரவனும் கபடி வீரர்தான். அவரது ஊக்கம், தமிழ்நாடு கபடி சங்க நிர்வாகிகள் ஆதரவினாலும் நடுவர் பணிக்கு மாறினேன். சன்பீம் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக இருக்கிறேன். புரோ கபடி மூலம் எனது கபடி பயணம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

அகிலன் ராமலிங்கம்: எனக்கு பூர்விகம் திருச்சி என்றாலும் பல தலைமுறைகளாக மலேசியாவில் வசிக்கிறோம். சொந்தமாக தொழில் செய்கிறேன். கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் காந்திகிராம்தான் எங்கள் ஊர். அங்குள்ள இந்தியப் பள்ளிகளில் கபடி விளையாடுவது வழக்கமானதுதான். ஆனால் போட்டிகளில் பங்கேற்கும் அளவில் இருக்காது. பின்னர் 2002ல் இந்தியாவில் இருந்து வந்திருந்த குழு எங்களுக்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. அதன் பிறகு தீவிரமாக கபடி விளையாட ஆரம்பித்து அதே ஆர்வத்தினால் கபடி நடுவராக மாறியுள்ளேன். அதற்கு மலேசியா கபடி சங்கத் தலைவர் சதாசிவம்,  சிலாங்கூர் மாநில கபடி சங்கத் தலைவர் அசோகன் ஆகியோர் முக்கிய காரணம்.  தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கடற்கரை கபடி விளையாட்டு போட்டியிலும், இந்தோனேசியாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் நடுவராக இருந்துள்ளேன்.  மலேசிய கபடி அணியில் தமிழர்கள்தான் அதிகம். இப்போது மாவட்ட, மாநில, தேசிய அளவில் கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புரோ கபடி மூலம் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.   



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arbitrators ,Tamilnadu , Tamilnadu arbitrators, mix in Pro Kapu
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...