×

ஆவணங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்தால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?: இலவச புகார் எண்ணில் தெரிவிக்க ஐஜி யோசனை

சென்னை: சார்பதிவாளர் வாய்மொழியாக ஆவணப்பதிவை மறுத்தால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள் ஆவணப்பதிவிற்கு நாள் மற்றும் நேரம், 30 நாட்கள் வரை இணையதளம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்படும்போது சார்பதிவாளரால் சரிபார்க்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்படும்.

* ஆவணம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ரசீது சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு ஆவணதாரருக்கு வழங்கப்படும். அதில் ஆவணம் எப்போது திரும்ப வழங்கப்படும் என்ற விவரம் அச்சிடப்பட்டிருக்கும். ஆவணம் திரும்பப்பெற அத்தாட்சி பெற்றவர் ரசீதில் அச்சிடப்பட்ட தேதியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அசல் ஆவணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

*  பதிவுச் சட்டம்,  பதிவு விதிகள், அரசாணைகள் மற்றும் பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கைகளில் கூறியுள்ளபடி தேவையான விவரங்களுடன் ஆவணம் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஆவணப் பதிவு மறுக்கப்படும். இவ்வாறு பதிவு மறுக்கப்படும் நிகழ்வுகளில் என்ன காரணத்திற்காக பதிவு மறுக்கப்பட்டது என்ற விவரத்துடன் பதிவு மறுப்புச் சீட்டு அச்சிடப்பட்டு சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு ஆவணதாரருக்கு வழங்கப்படும். இந்நிகழ்வுகளில் ஆவணதாரர்கள் பதிவு மறுப்புச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களை சரி செய்து மீண்டும் ஆவணத்தினை பதிவு செய்துகொள்ளலாம்.

எனவே, ஒரு ஆவணம் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டு ஆவணம் முறையாக பதிவு செய்யப்பட்டாலோ அல்லது நிலுவை வைக்கப்பட்டாலோ அல்லது ஆவணம் பதிவுக்கு மறுக்கப்பட்டாலோ எந்த நிகழ்வாயினும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு  சார்பதிவாளரால் கையொப்பமிட்டு ஆவணதாரருக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறின்றி சார்பதிவாளர் வாய்மொழியாக ஆவணப்பதிவை மறுத்தால் 1800-102-5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : referee ,IG , register, documents, IG,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு