×

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள், வீரர்கள் முன்பதிவை முன்கூட்டியே நடத்த வேண்டும்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கும். 650க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 400க்கும் மேற்பட்ட வீரர்களும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். காளை மற்றும் வீரர்கள் முன்பதிவு ஜல்லிக்கட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு நடைபெறுகிறது. முன்பதிவுக்காக ஆயிரக்கணக்கான வீரர்கள், காளை உரிமையாளர்கள் கூடுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதை தவிர்க்க காளை, வீரர்கள் முன்பதிவை முன்கூட்டியே துவக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாடுபிடி வீரர் அஜய் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி வழங்கலாம். ஆனால் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தவிர்க்க பதிவு எண் அடிப்படையில் காளைகளை வரிசைப்படுத்தி அவிழ்த்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். விழாக்குழு முன்னாள் தலைவர் பாலாஜி, காளை வளர்ப்பவரான கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘பதிவிற்காக காளைகள் மற்றும் வீரர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க முன்கூட்டியே பதிவை துவக்கவேண்டும். கால்நடைத்துறை சார்பில் நடைபெறும் முன்பதிவை ரத்து செய்து, வருவாய்த்துறை மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் முன்பதிவை துவக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alanganallur ,Palamadu Jallikal , Alankanallur, Palamedu, Jallikattu, Bulls, Players, Reservations
× RELATED வேளாண் மாணவிகள் சார்பில் கொய்யா...