×

6,175 கோடி மதிப்பிலான எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரம் இணைப்பு சாலை திட்டத்துக்கு அனுமதி

சென்னை: 6,175 கோடி மதிப்பிலான எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரம் இணைப்பு சாலை திட்டத்துக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்டச் சாலையினை  6,175 கோடி மதிப்பில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த சுற்றுவட்டச் சாலை எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கபெருமாள் கோயில் வழியே மாமல்லபுரத்துக்கு செல்கிறது.

இந்த சாலையின் மொத்த நீளம் 133 கிலோமீட்டர் ஆகும். இதில் 97 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. 35 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கெனவே இருக்கும் சாலை மேம்படுத்தப்படுகிறது. இந்த புதிய சாலையில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் அமையும். 81 கிராமங்கள் வழியே பயணிக்கும் இந்த புதிய சாலையானது 77 கி.மீ தூரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதி வழியாகவும் செல்கிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் கொண்டமங்கலம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 25 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.

இந்த சாலை அமைக்கும் பணிக்காக மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்தது. விண்ணப்பத்தை பரிசீலித்த மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.  இந்த நிலையில், மத்திய கடற்கரை  ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே, சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலை பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் கன்சல்டன்ட் விண்ணப்பிக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த தனியார் நிறுவனம் சார்பில் அளிக்கப்படும் திட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சாலை பணிகளை தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ennore Port , Ennore port, Mamallapuram, link road
× RELATED நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் திடீர் தீ