×

கஜா புயல் சேதம் குறித்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : கஜா புயல் சேதம் குறித்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 16ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயலால், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழு 3 நாட்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். ஆய்வு நிறைவடைந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய குழுவின் அறிக்கை கிடத்த ஒரு வாரத்துக்குள் கஜா புயல் நிவாரண நிதி குறித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மண்ணெண்னை, ஸ்டவ் தர வேண்டும் என்றும், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மண்ணெண்னை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். புயல் பாதித்த கிராமங்களில் ஒரு வாரத்துக்குள் 100 சதவீத மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிராமங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்றும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்வசதி செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். சேதமடைந்த தென்னை, படகுகளுக்கு தற்போது அறிவித்து இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், துணை ராணுவத்தை வைத்து சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல பேருந்துகளில் இலவசமாக அனுமதி வழங்க வேண்டும், புயல் பாதித்த பகுதிகளில் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் கஜா புயலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மாத காலம் அவகாசம் வாங்கி தர, சிபிஎஸ்இ அமைப்பிடம் கலந்து பேசி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,branch , Gajah Storm, Direction, Central Committee, High Court Branch, Neet Exam
× RELATED ஆதிச்சநல்லூரில் நிரந்தர...