×

தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசு! : வேல்முருகன் கண்டனம்!!

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’13வது சட்டதிருத்தம் குறித்து இலங்கையே முடிவு செய்யலாம் என்று இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. இது தமிழனத்திற்கு எதிரான போக்கு. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தாத நிலையில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வது குறித்து இலங்கை அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக சிங்கள தலைவர்கள் ஒருமித்த கருத்துக்களுடனேயே பயணிக்கின்றனர். அதாவது 13 வது திருத்தச் சட்டம் ஊடாக தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என்பதில் இலங்கையில் உள்ள எதிர்கட்சி, ஆளும் கட்சி, இடதுசாரி கட்சிகள் என அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.13வது சட்டத்திருத்தச்  முழுமையாக அமுல்படுத்த இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கூடாது.  இந்தியா, இலங்கையின் உள் நாட்டு விசயத்தில் தலையிடக்கூடாது என்று பௌத்த பிக்குகள் தொடங்கி அந்நாட்டின் அமைச்சர்கள் வரை மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.தமிழீழ தனி அரசு கேட்டு பல இலட்சக்கணக்கான உயிர்களை பறி கொடுத்து விட்டு தமிழர்கள், இன்று மாகாண சபை அதிகாரங்களை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது.போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக கொடுத்த விலை மிக அதிகமானது. அத்தோடு அதற்காக தமிழ் மக்கள் இழந்த காலம் அதைவிட அதிகம். விடுதலைப் புலிகள் பலமாக இருந்தால் போர் நடைபெற்ற கடந்த முப்பது ஆண்டுகளில் தனி தமிழீழ அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.ஆனால் இன்று விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஓய்ந்த  பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதையே ஏற்க மறுக்கும் கோட்டபாய ராஜபக்ச அரசு, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்குள் தமிழர்களின் இனத்தின் அரசியல் உரிமைகளை மூடி மறைக்க முயற்சிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.இதன் மூலம், ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கப்படும். அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம்  சீர்குலைக்குப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப்படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில், மூன்றுநாள் பயணமாக கடந்த 5ஆம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார்.அப்போது 13வது சட்டதிருத்தம் குறித்து  இலங்கையே முடிவு செய்யலாம் என்று ஜெய்சங்கர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. 20வது சட்டதிருத்தம் மூலம் 13வது சட்டதிருத்தத்தை அழிக்க நினைக்கும், சிங்களபேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணைபோகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. எனவே,  ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும்  பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக்  கைவிட வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று, தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, இலங்கையில் உள்ள தமிழர் தாயகத்திற்கான அதிகாரங்களை பெற்றெடுக்கும் வகையில் குரல் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  இதனடையே, இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. எனவே, தமிழர்கள் இலங்கை அரசின் சூழ்ச்சி வலைகளை புரிந்து ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது….

The post தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசு! : வேல்முருகன் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Government of India ,Sri Lankan Government ,Tamils ,Welmurugan ,Chennai ,Tamil Nadu Livelihood Party ,Velmurugan ,Sri Lanka ,Srilankan Government ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!