உடற்கூராய்வுக்கு பின்னரே நிவாரணம் என அறிவிப்பு: கஜா புயலால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் பெறுவதில் சிக்கல்!

நாகை: கஜா புயலால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் பெறுவதில் நீடிக்கும் சிக்கலை சரி செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் பலியாகின. பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்து மீட்புக்குழுவினர் உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கால்நடை மருத்துவக் குழு உடனடியாக வர முடியாததால் புயல் பாதிப்பால் பல்வேறு இன்னல்களை சந்தித் பலர் அந்த சூழ்நிலையில் தங்களது கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்ய முடியாமல், துர்நாற்றம் வீசியதால் குழிதோண்டி புதைத்துவிட்டனர். இதனிடையே இறந்த கால்நடைகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை பெற, இறந்த ஆடு மற்றும் மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை கொடுத்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள கிராமமான விழுந்தமாவடியில் மட்டும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளன.

இந்த கிராமத்திற்கு 3 நாட்களுக்கு பிறகு தான் கால்நடை மருத்துவர்கள் வந்தார்கள் என்பதால் அதற்குள் இறந்த கால்நடைகளை மண்ணில் புதைத்துவிட்டனர். இதேபோன்று பல கிராமங்களிலும் உயிரிழந்த கால்நடைகளை புதைத்துவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புயலால் இறந்த பசுமாடுகளுக்கு தலா 30,000 ரூபாயும், இறந்த ஆடுகளுக்கு தலா 3,000 ரூபாயும் மற்றும் காளைகளுக்கு தலா 25,000 ரூபாயும் தமிழக அரசு நிவாரணமாக அறவித்துள்ளது. இழப்பீடு வழங்குவதில் உள்ள விதிகளை தளர்த்தி கால்நடைகளை இழந்த அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: