×

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம்: கெஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கான பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான தீர்மானம், டெல்லி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், அனைத்திந்திய ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் ராம்லீலா மைதானத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றியதாவது:
டெல்லியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம். இதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின், பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஒப்புதலை பெற்று அமல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் நாங்கள் போராடுவோம்.

இதுமட்டுமின்றி, மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்களிடமும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோருவேன். ஒரு அரசாங்கத்தை மாற்றியமைக்கும் வல்லமை அரசு ஊழியர்களுக்கு உள்ளது. எனவே, நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன். அடுத்த மூன்று மாதத்திற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவிட்டால், அடுத்த 2019ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசின் புதிய பென்சன் திட்டம் என்பது, அரசு ஊழியர்களை ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் ஆகும். அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டு தேசத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். புதிய பென்சன் திட்டம் கடந்த 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை ஊழியரின் கணக்கில் அரசு செலுத்தும். இந்த தொகையானது நிதி மேலாளர்களால் (பண்ட் மேனேஜர்கள்) குறிப்பிட்ட முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு ஓய்வுக் காலத்தில் ஊழியருக்கு பென்சன் வழங்கப்படும். இந்த புதிய பென்சன் திட்டத்திற்கு நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பென்ஷனில் ஊழியர்களிடம் தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government employees ,Benson ,Delhi ,Kejriwal , Delhi, government employees, old pension scheme, Kejriwal
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்