×

3வது டெஸ்டிலும் அபார வெற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

கொழும்பு: இலங்கை அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், 42 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில்  தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. பேர்ஸ்டோ  110, ஸ்டோக்ஸ் 57 ரன் விளாசினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு சுருண்டது. கருணரத்னே 83, தனஞ்ஜெயா டி சில்வா 73 ரன் எடுத்தனர்.  இதைத் தொடர்ந்து, 96 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 230 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஸ்டோக்ஸ் 42, பட்லர் 64, போக்ஸ்  36* ரன், ரஷித் 24 ரன் எடுத்தனர்.

இதையடுத்து, 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்  எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 274 ரன் தேவை என்ற நிலையில் குசால் மெண்டிஸ் 15 ரன், சந்தகன் 1 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.  சந்தகன் 7 ரன் எடுத்து லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட்டார்.அடுத்து குசால் மெண்டிசுடன் இணைந்த ரோஷன் சில்வா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்து நம்பிக்கை  அளித்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குசால் 86 ரன் (129 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.  டிக்வெல்லா 19 ரன், தில்ருவன் பெரேரா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

உறுதியுடன் போராடிய ரோஷன் சில்வா 65 ரன் (161 பந்து, 4 பவுண்டரி) எடுத்து மொயீன் அலி சுழலில் எல்பிடபுள்யு ஆனார். இலங்கை அணி 226 ரன்னுக்கு 9  விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கினாலும், கடைசி வீரராக வந்த புஷ்பகுமாரா அதிரடியாக ரன் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேப்டன்  லக்மல் - புஷ்பகுமாரா இணை 10வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்து மிரட்டியது.எனினும், லக்மல் 15 ரன் எடுத்த நிலையில் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழக்க... இலங்கை அணி 86.4 ஓவரில் 284 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது. புஷ்பகுமாரா  42 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட்,  ஸ்டோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 42 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ்  செய்தது. ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருதும், பென் ஸ்டோக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : whitewash ,Test ,Sri Lanka , Success , 3rd Test Whitewash, Sri Lanka,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...