×

ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலி அம்பரீஷ் உடல் தகனம்

பெங்களூரு: உடல் நல குறைவால் காலமான முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் தகனம் செய்யப்பட்டது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ், சில ஆண்டுகளாக சிறுநீரகம் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஐசியுவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.  அன்றிரவு 10.45 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சடங்குகள் செய்தபின், கண்டீரவா விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டியா கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் அங்குள்ள விஷ்வேஸ்வர்யா விளையாட்டு திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இரவு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதை ெதாடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவில் இருந்து பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையம் கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கண்டீரவா விளையாட்டு அரங்கம் வந்தது. சில நிமிடங்கள் வைத்திருந்த பின் பகல் 12.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கண்டீரவா ஸ்டுடியோ நோக்கி சென்றது. முக்கிய சாலைகள் வழியாக 13 கி.மீட்டர் தூரம் சென்று மாலை 4.15 மணிக்கு ஸ்டுடியோவை சென்றடைந்தது. அவரது உடலுக்கு முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடியூரப்பா, அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், எச்.டி.ரேவண்ணா, சா.ரா.மகேஷ், டி.சி.தம்மண்ணா, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.அசோக், எச்.சி.மகாதேவப்பா, நடிகர்கள் சிவராஜ்குமார், ரவீந்திரன், ஜக்கேஷ், தர்ஷன், அர்ஜுன்.பிரகாஷ்ராஜ், சுதீப், யஷ் உள்பட பலர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதை தொடர்ந்து மாநில போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தியின், அம்பரீஷ் உடல் மீது போர்த்தியிருந்த தேசியகொடியை போலீசார் மரியாதையுடன் அகற்றி முதல்வர் குமாரசாமி மற்றும் துணைமுதல்வர் பரமேஸ்வர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரும் அம்பரீஷின் மனைவி சுமலதாவிடம் கொடுத்தனர். அதை தொடர்ந்து அம்பரீஷ் குடும்பத்தின் பிரதான புரோகிதர்கள் மத்தூர் சிக்கஹுச்சையா, கோணப்பா பூஜாரி ஆகியோர் ஒக்கலிக வழக்கத்தின் படி வேத மந்திரங்கள் ஓதி சடங்குகள் செய்தனர். பின்னர் குடும்பத்தினர் உடலை சுற்றி வந்தனர். பின் பால், தயிர், 10 கிலோ நெய், 5 கிலோ கொப்பரை, 250 கிலோ சந்தன கட்டைகள், ஊதுவத்தி, இளநீர், தேன், சாம்பராணி, மஞ்சள், குங்குமம், திருநீரு உள்ளிட்டவைகள் பயன்படுத்தி பூஜைகள் செய்தனர். சுமார் 45 நிமிடங்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்யப்பட்டது. அதன் பின் அவரது உடல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன கட்டைகள் மீது வைக்கப்பட்டது. பின் மாலை 5.58 மணிக்கு அம்பரீஷ் உடலுக்கு அவரது மகன் அபிஷேக் தீ மூட்டினார்.

அப்போது அருகில் இருந்த அவரது மனைவி சுமலதா, முதல்வர் குமாரசாமி உள்பட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள் கதறி அழுதனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஒடஹூட்டிதவரு (உடன் பிறந்தவர்கள் ) என்ற கன்னட படத்தில் நடிகர் ராஜ்குமார் மற்றும் அம்பரீஷ் இணைந்து நடித்தனர். நேற்று ராஜ்குமார் சமாதி அருகில் அம்பரீஷ் உடல் தகனம் செய்ததின் மூலம் திரைப்பட காட்சிகள் உண்மையாகியது. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீரின் மத்தியில் அம்பரீஷ் பஞ்ச பூதங்களில் தன்னை இணைத்து கொண்டார்.

1800 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம்

பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் உடல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 13 கி,மீ தூரம் கொண்ட கண்டீரவா ஸ்டூடியோவுக்கு ஜீரோ சிக்னல் மூலம் நகரின் முக்கிய சாலைகளான அல்சூர்கேட் போலீஸ் ரோடு, கே.ஜி.ரோடு, மைசூரு சர்க்கிள், அரண்மனை சாலை, காவேரி ஜங்ஷன், பாசியம்சர்க்கிள், சாங்கிரோடு, மாரம்மா சர்க்கிள், யஷ்வந்தபுரம் மேம்பாலம், மெட்ரோ ரயில் நிலையம் வளைவு, ஆர்.எம்.யார்டு போலீஸ் நிலையம் வழி, கொரகுண்டபாளையா, எப்.டி.ஐ வழியாக கண்டீரவா ஸ்டூடியோவை வந்தடைந்தது. வாகனம் முழுவதும் 1800 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு வாகனத்தில் குடும்பத்தினர் அமர்ந்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கண்டீரவா ஸ்டூடியோவுக்கு கொண்டு வரப்பட்ட அம்பரீஷ் உடலுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சினிமா நடிகர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர் பின் இறுதி சடங்கு நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amaresh ,fans , Amaresh's, thousands of fans
× RELATED அனைத்து விதமான கிரிக்கெட்...