×

2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: பிரதமர் மோடி வாக்குறுதி

ஜெய்ப்பூர்: நமது நாடு 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ராஜஸ்தானில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, வாக்கு சேகரித்து, பிரசாரம் செய்தார்.

மேலும் மேவார் பகுதியில் உள்ள பில்வாரா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, நான் ஒருநாளாவது விடுமுறை எடுத்ததாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஓய்வுக்காக நான் எங்கேயாது சென்றதாகவோ, ஒருவாரம் காணாமல் போனதாகவோ நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?. எனது ஒவ்வொரு செயலையும், நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வெளிப்படையாகவே செய்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதே நாளில் உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் நடந்தது. அப்போது, காங்கிரஸ்காரர்கள் தேசபக்தி தொடர்பாக பாடம் நடத்தி கொண்டிருந்தனர். ஆனால், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நாங்கள் தாக்குதல் நடத்தியபோது இந்த நாடே பெருமைப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மட்டும் கேள்வி கேட்டது. தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தேவை என்று வலியுறுத்தியது.

பின்னர், பன்ஸ்வாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் நமது நாட்டின் விடுதலைக்காக எதுவும் செய்தது இல்லையா? இந்த நாட்டின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததில்லையா? இது எனக்கு தெரியும், உங்களுக்கு தெரியும், வரலாறுக்கும் தெரியும். ஆனால், காங்கிரசுக்கு மட்டும் இது தெரியவில்லை என்றார். தங்கள் இனத்தவர்களுக்கு என்று தனிப்பட்ட அமைச்சகம் தேவை. தனியான நிதி ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினத்துக்கு என தனி அமைச்சர் தேவை என அவர்கள் வலியுறுத்தி வந்தனர், ஆனால், காங்கிரஸ் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. வாஜ்பாய் பிரதமரான பிறகுதான் பழங்குடியின மக்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, பனேஷ்வர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதே விளைபயிர்களுக்கான காப்பீடு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்களால் தங்களது பதவி நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறைகள் கடந்த 55 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளன. ஆனால், மின்சாரம், குடிநீர், சாலைகள், கழிப்பிட வசதி ஆகியவை கிராமங்களை சென்று சேரவே இல்லை’ என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,Modi ,house , Indians, own house, Prime Minister Modi, promise
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...