×

புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூரில் நாளை மறுநாள் ஆய்வு : நாளை ரயிலில் புறப்படும் முதல்வர்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு ரயில் மூலம் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த 16ம் தேதி அதிகாலை வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20ம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.

அப்போது மழை பெய்ததால் தனது பயணத்தை ரத்து செய்து, முதல்வர் சென்னை திரும்பினார். அதன்பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை விரைவில் பார்வையிட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்திய குழு, நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை இரவு காரைக்கால் விரைவு ரயில் மூலமாக நாகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் முதல் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து முதல்வர் குறைகளை கேட்டறிய உள்ளார். ஆய்வு செய்ய ஹெலிகாப்டரில் சென்றது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் முதல்வர் ரயிலில் செல்வது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Nag ,Tiruvarur , Gajah Storm, Chief Minister Palani, study, Nagai, Tiruvarur
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!