×

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டத்திற்கு நீராவி இன்ஜின் ரயில் 3வது முறையாக இயக்கம் : பொதுமக்கள் குதூகல பயணம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு 163 ஆண்டுகள் பழமையான நீராவி இன்ஜின் ரயில் 3வது முறையாக நேற்று இயக்கப்பட்டது. இதில் கலெக்டருடன் பொதுமக்கள் குதூகலத்துடன் பயணித்தனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு நடந்த ரயில் போக்குவரத்து தொடக்கத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் ரயிலும், சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் ரயில்வே பாரம்பரிய பயண திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் மற்றும் ரயில் ஆர்வலர்களை கவரும் வகையில் திருச்செந்தூர்  ஸ்ரீவைகுண்டம் ரயில் வழித்தடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இயக்கப்பட்ட நீராவி இன்ஜினுடன் கூடிய சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்காக கடந்த 1855ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்ட ‘ஈஐஆர்21’ வகை நீராவி ரயில் இன்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளிர்சாதன வசதிகொண்ட பிரத்யேகமான ரயில் பெட்டி, புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு தனி ரயில் இன்ஜின் மூலம் கொண்டு வரப்பட்டு, அதன் சோதனை ஓட்டம், கடந்த 9ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.  

இதைத்தொடர்ந்து 2வது முறையாக திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை நீராவி இன்ஜின் ரயில் கடந்த 17ம் தேதி இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3வது முறையாக நீராவி இன்ஜின் நேற்று இயக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற  கலெக்டர் சந்தீப் நந்தூரி நீராவி இன்ஜினை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  திருச்செந்தூர் ஆர்டிஓ கோவிந்தராஜூ, திருச்செந்தூர் தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிநாயகம், விஏஓ மூக்காண்டி, ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ மாணிக்கம், ஏட்டு ரத்தினராஜ், ரயில்வே கோட்ஸ் டிப்போ அதிகாரி ஸ்ரீஹர்ஷா, டிராபிக் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், ஆர்ஐ மாணிக்கம், பிஆர்ஓ சீனிவாசன், ஸ்டேஷன் மாஸ்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ரயில் பெட்டியில் மொத்தம் 40 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிகள் கட்டணம் செலுத்தி குதூகலத்துடன் பயணித்தனர். பெரியவர்களுக்கு ரூ.500, சிறியவர்களுக்கு ரூ.400 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பாரம்பரிய பெருமை

 இந்த நீராவி இன்ஜின் ரயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தனது மனைவி, 10 வயது மகன் என குடும்பத்துடன் பயணித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாரம்பரிய பெருமைமிக்க நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்வது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுக்கும் காலமாக தற்காலம் திகழ்கிறது’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruchendur ,Srivaikuntam ,Movement: Public , Thiruchendur, Srivakundam, steam engine
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...