×

முழு கொள்ளளவை எட்டியது, அரும்பாவூர் பெரிய ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்முறையாக  அரும்பாவூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இன்று நிரம்பி வழிந்து  கடை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில்  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு  பெய்த வடகிழக்குப் பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 45 ஏரிகள்  நிரம்பி வழிந்தன. கடந்த ஆண்டு ஒற்றை இலக்க எண்களிலேயே ஏரிகள் 100 சதவீதக்  கொள்ளளவை எட்டின.

இந்நிலையில் கடந்த 15ம்தேதி டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய  கஜா புயலின் பாதிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த 308 மி.மீ. பெய்த  மழையொடு, 23ம்தேதி பெய்த 607 மி.மீ. கனமழை காரணமாக பச்சை மலையிலிருந்து  உற்பத்தியாகி வரும் கோரையாறு, கல்லாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில்  மலையாளப்பட்டி ஊராட்சி சின்ன முட்லு வழியாக பாய்ந்துவரும் கல்லாற்றின்  நீர் ஒரு பகுதி கொட்டாரக் குன்று வழியாக அரும்பாவூர் பெரிய ஏரிக்குப்  பிரித்து அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக 53 மில்லியன் கனஅடி கொள்ளளவு  கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வருகிறது.

நேற்றிரவு நிலவரப்படி 98  சதவீதம் பெரிய ஏரி நிரம்பியிருந்தது. தொடர்ந்து பச்சை மலையிலிருந்து  கல்லாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று பெரிய ஏரி தனது  100 சதவீத கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து கடைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அரும்பாவூர் பேரூராட்சி  நிர்வாகத்தின் சார்பாக பணியாளர்களைக் கொண்டு சித்தேரிக்கு நீர்வரும்  வாய்க்கால் பகுதி அவசர அவசரமாகத் தூர்வாரப்பட்டது. அரும்பாவூர் பெரிய ஏரி  ஆண்டுதோறும் அதே பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் மீன் வளர்க்க  ஏலமெடுத்து பல டன் கணக்கில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம் என்பதால் நடப்பாண்டு பெய்த முதல் மழையிலேயே ஏரி நிரம்பி இருப்பது  மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களை  மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,Arumbavur Big Lake: Farmers , Arumbavur, lake, farmers
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...