×

காரியாபட்டி அருகே வரத்துக் கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, கண்மாய் நீர்வரத்துக் கால்வாயை சொந்தப் பணம் மூலம் தூர்வாரி வரும் கிராம மக்கள், தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி அருகே அரசகுளம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கண்மாய் நீர் மூலம் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், நீர்வரத்துக் கால்வாய் தூர்வாராமல் புதர்மண்டிக் கிடப்பதால், கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு நீர்வரத்தில்லை. இந்நிலையில், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் தண்ணீர் வரும் வரத்துக்கால்வாயை அரசகுளம் கிராம மக்கள் சொந்த பணம் மூலம் தூர்வாரி வருகின்றனர்.

ஆவியூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வரும் வரத்துக்கால்வாயை குரண்டிஆவியூர் சாலையில் தரைப்பாலம் அமைக்காமல் பேவர்பிளாக் கற்கள் பத்தித்து உயரமாக அமைத்து விட்டனர். மேலும் அருகில் உள்ள தனியார் பள்ளி வரத்துக் கால்வாயை மறித்து பள்ளிக்கு விளையாட்டு திடல் மற்றும் நடைபாதை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கண்மாய்க்கு மழைநீரோ கால்வாய் நீரோ வர வழியில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி வரத்துக் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கண்ணன் என்பவர் கூறுகையில், ‘எங்கள் ஊரில் கிணற்று பாசனம் மூலம்  வெங்காயம், கடலை விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாயை மறித்து ரோடு போட்டவர்கள் தரைப்பாலம் அமைக்கவில்லை. அருகில் உள்ள தனியார் பள்ளியும் கால்வாயை  ஆக்கிரமித்து விளையாட்டு திடல் அமைத்துள்ளனர். கிராம மக்கள் சொந்தப் பணம்  மூலம் கண்மாய் நீர்வரத்து கால்வாயை ஜேசிபி மூலம் தூர்வாரி வருகிறோம். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றார்.

சிவராம் கூறுகையில், ‘கிராம மக்கள் சொந்தப் பணம் மூலம் கண்மாய் நீர்வரத்துக் கால்வாயை தூர்வாரி வருகிறோம். மாங்குளம், குரண்டி வழியாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய்திட்டத்தின் மூளம் அரசகுளத்திற்கு வரும் தண்ணீர் முழுமையாக கிடைக்க கிராமத்தோடு இணைந்து அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும். எங்க பகுதியில் வெங்காயம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். எனவே, நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமைப்பை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village villagers ,Kariapatti , Kariapatti, canal, villagers
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...