×

ராணுவ உறவை வலுப்படுத்த கடற்படை தளபதி ரஷ்யா பயணம்

புதுடெல்லி: இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், கடற்படை தளபதி சுனில் லன்பா இன்று முதல் 4 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மறைமுகமாக அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும்  அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தபோது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்திய கடற்படைக்காக கோவா கடற்படை தளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் இரண்டு புதிய போர்க்கப்பல்கள் கட்டுமானத்துக்காக ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தமும் சமீபத்தில் கையெழுத்தானது.

போர் கப்பலுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை ரஷ்யா வழங்கும். இந்நிலையில், இரு நாட்டுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா 4 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார். இதற்காக அவர் இன்று ரஷ்யா புறப்பட்டு செல்கிறார். இது தொடர்பாக கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் ஷர்மா கூறுகையில், “ரஷ்யாவின் கடற்படை அட்மிரல் விளாடிமிர் கோரோலேவ்,  பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஜெனரல் விவி ஜெரசிவ்மாவ் உட்பட ராணுவ உயரதிகாரிகளை லன்பா சந்தித்து உரையாடுகின்றார்” என்றார்.  

‘எந்த ஒரு சவாலையும்
சந்திக்க தயாராக உள்ளோம்’
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் படகு மூலமாக கராச்சியில் இருந்து மும்பை நகருக்குள் ஊடுருவினர். இந்த தாக்குதல் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மும்பை தாக்குதல் நடந்த 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்று நிருபர்களை சந்தித்த கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கூறுகையில், “ 10 ஆண்டுகளுக்கு முன் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த சம்பவத்துக்கு பின், கடற்படை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக தயாராகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடற்படை சக்தி வாய்ந்ததாக மாறி உள்ளது.

நாட்டின் நலனை பாதுகாப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கும், சமாளிப்பதற்கும் முழுவதும் தயாராக உள்ளது. குர்கானை தலைமையிடமாக கொண்டு 42 ரேடார் நிலையங்களை உள்ளடக்கிய வலுவான கண்காணிப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படை மற்றும் கடற்படை உட்பட பல்வேறு அமைப்புகள் என பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு கண்காணிக்கும் வகையில் நவீன கேமராக்கள் ரேடார் மையங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Naval Commander ,Russia , military relationship, Naval Commander, Russia
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!