×

நங்கநல்லூர், மணப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் கொசு உற்பத்தி செய்யும் கிணறுகள் மூடப்படுமா?

ஆலந்தூர்: நங்கநல்லூர், மணப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் கொசு உற்பத்தி செய்யும் பாழடைந்த கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, வீடுகளில் தண்ணீர்  தேங்காதபடியும் பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை அகற்றியும் தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை  மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து  வருகின்றனர். மேலும், காலியான மனைகளில் குப்பை கொட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என பல இடங்களில் விளம்பர போர்டும் வைத்துள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநகராட்சி அதிகாரிகள்  தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள், குப்பை தொட்டிகள், பொது கிணறுகள்  போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிப்பதில்  கோட்டை விட்டுள்ளனர்.

குறிப்பாக, ஆலத்தூர் 12வது மண்டல மாநகராட்சிக்கு உட்பட்ட  பல்வேறு பகுதியில் உள்ள பயன்பாடற்ற திறந்தவெளி பொது கிணறுகள்  மக்களை அச்சுறுத்தும் வகையில் கொசுக்களை உற்பத்தி செய்யும் மையமாக உள்ளது.   கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இதனை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக, நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் பாழடைந்து  பயனற்று கிடக்கும் ராட்சத கிணற்றினால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்க்கேடு  ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் இங்கு இனப்பெருக்கம் செய்யும் கொசுக்கள்  இரவு நேரங்களில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நுழைந்து மக்களின் தூக்கத்தை கெடுப்பதுடன்  நோயையும் பரப்பி வருகின்றன. இதேபோல், மணப்பாக்கம் அண்ணா சாலையில் உள்ள பொதுகிணறு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சியாக இருந்தபோது மணப்பாக்கம் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வந்தது. இந்த கிணற்றில் மோட்டார்  போட்டு அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதனை  தூர்வாராமல் விட்டதால், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து கிடக்கிறது. தற்போது, இந்த கிணற்றில் கிழிந்த துணிகள்,  பாய்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்காய் மட்டைகள் என தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த கிணறு கொசுக்களை உற்பத்தி செய்யும் கிடங்காக மாறியுள்ளது.

கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனக்கோட்டி ராஜாதெருவில் உள்ள பொதுகிணறும் தூர்வாரப்படாமல் திறந்தவெளியாக உள்ளது. இந்த கிணறு 10 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து கிடக்கிறது. இந்த கிணற்றில் உள்ள நீர்  சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பராமரிப்பு இல்லாமல் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகளை மூடிவிடும்படி மாநகராட்சியில் பொதுமக்கள் பலமுறை கடிதம் கொடுத்தும்  எந்தவித  நடவடிக்களையும் எடுக்கவில்லை இல்லை என்று  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள பாழடைந்த கிணறுகளை மாநகராட்சி அதிகாரிகள் முழுவதுமாக மூடிவிட்டு   சுகாதாரத்தை காக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wells ,Ezhikkattaangal ,Manapakkam , Nanganallur, Manapakkam, Echikattanangal ,closed?
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது