×

3வது டி20ல் அபார வெற்றி தொடரை சமன் செய்தது இந்தியா: குருணல் ஆட்ட நாயகன்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில், பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா டி/எல் விதிப்படி 4  ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் கைவிடப்படப்பட்டது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸி. அணியில் பெஹரன்டார்புக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார்.  டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. ஷார்ட், பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 68 ரன் சேர்த்தது.

பிஞ்ச் 28 ரன் (23 பந்து, 4 பவுண்டரி) எடுத்து குல்தீப் சுழலில் குருணல் வசம் பிடிபட்டார். ஷார்ட் 33 ரன் எடுத்து குருணல் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து வந்த மெக்டெர்மாட் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன்  திரும்பினார். மேக்ஸ்வெல் 13 ரன், அலெக்ஸ் கேரி 27 ரன் (19 பந்து, 4 பவுண்டரி) எடுத்து குருணல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கிறிஸ் லின் 13 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 25 ரன், கோல்டர் நைல் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் குருணல் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்  விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 67 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஸ்டாய்னிஸ் வீசிய 5வது  ஓவரை துவம்சம் செய்த இவர்கள், அதில் மட்டுமே 22 ரன் (0, 6, 1, 1 வைடு, 6, 4, 4) சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவான் 41 ரன் (22 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். ரோகித் 23 ரன்  எடுத்து (16 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆடம் ஸம்பா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 6.5 ஓவரில் 67 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது சற்று பின்னடைவை கொடுத்தது.

அடுத்து கேப்டன் கோஹ்லி - கே.எல்.ராகுல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. ராகுல் 14 ரன் எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் கோல்டர் நைல் வசம் பிடிபட்டார். ரிஷப் பன்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்  அவுட்டாகி ஏமாற்ற, இந்தியா 13.1 ஓவரில் 108 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில், கோஹ்லியுடன் இணைந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுத்தார்.உறுதியுடன் விளையாடி ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த கோஹ்லி 34 பந்தில் அரை சதம் அடித்தார். கடைசி 4 ஓவரில் 40 ரன் தேவைப்பட்ட நிலையில், கோஹ்லி - கார்த்திக் ஜோடி பதற்றமின்றி விளையாடி இலக்கை  நெருங்கியது. டை வீசிய கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவைப்பட, முதல் 2 பந்துகளில் ரன் எடுக்காத கோஹ்லி, அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை வசப்படுத்தினார்.

இந்தியா 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து வென்றது. கோஹ்லி 61 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கார்த்திக் 22 ரன்னுடன் (18 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். குருணல்  பாண்டியா ஆட்ட நாயகன் விருதும், ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  மோதுகின்றன.முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெறுகிறது (நவ.28 - டிச.1).



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,scorer ,T20 World Cup ,Man of the Match , Winner ,3rd T20, India ,Gurunal Man , match
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்