×

இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டம் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்

கொழும்பு: ரணில் விக்ரமசிங்கேவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தை முடக்கிய அவர் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமனம் செய்தார்.  ராஜபக்சே மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆதரவு வலுத்தது. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் நாடாளுமன்றதை கலைப்பதாகவும், ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்றும் அதிபர்  சிறிசேனா அறிவித்தார். இதனை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து கூடிய நாடாளுமன்றத்தில்  ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், ராஜபக்சே தோல்வியை கண்டார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் சிறிசேனா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் மீண்டும் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிப்பேன் என்பதற்கு சாத்தியமே கிடையாது. எனது முடிவின் காரணமாக நாட்டில் அரசியல் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை தீவிரமான அரசியல்  பிரச்னையாக நான் கருதவில்லை. எனக்கும், ரணிலுக்கும் அரசின் அணுகுமுறையில் தீவிரமான கொள்கை வேறுபாடு உள்ளது. முதலில் அமைச்சரவை நியமனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உயர்கல்வி மற்றும்  நெடுஞ்சாலை துறையை கையாளுவதற்கு ஒரே அமைச்சசகத்தை அவர் நியமித்தார்.  மத்திய வங்கி கவர்னர் வேட்பாளராக சிங்கப்பூரை சேர்ந்த அர்ஜூன மகேந்திரனை விக்ரமசிங்கே முன்னிறுத்தினார். ஆனால், அவர்  இலங்கையை சேர்ந்தவர் இல்லை என்றேன். ஆனால், எனது கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய வங்கியில் பத்திரங்கள் வழங்குவதில் நடைபெற்றுள்ள முறைகேட்டிற்கு மகேந்திரன்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் தலைமறைவாகி உள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பது விக்ரமசிங்கேவிற்கு தெரியும். அவர்  இலங்கை அரசுக்கு பொருந்தாத, அழிவுகரமான நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவு தருபவர். இதுபோன்ற ஒரு தலைவருடன் நான் எவ்வாறு பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan ,Vikramasinghe , Sri Lankan, President, Sirisena Project, Wickramasinghe,prime minister
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை