×

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் கடத்திய 6 பெண்கள் அதிரடி கைது: ஆண்கள் சிக்குவதால் திட்டத்தை மாற்றிய மாபியா கும்பல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 2.1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இந்த கடத்தலில் ஆண்களுக்கு அதிகளவு பெண்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சென்னை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக விமானத்தில் இருந்து இறங்கும் பெண்களை தீவிரமாக  கண்காணிக்க துவங்கினர்.இந்நிலையில் இந்த தங்க வேட்ைடயில் பெண் சுங்க அதிகாரிகளும் பெருமளவில்  ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  வந்தது. சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் வந்த சென்னையை சேர்ந்த பாத்திமா நாச்சியார் (42) என்ற பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பெண் அதிகாரிகள் மூலம் அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தங்க செயின்கள் மற்றும் தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததை  கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 800 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள், பாத்திமா நாச்சியாரை கைது செய்தனர். இதேபோன்று நேற்று காலை 8.30 மணிக்கு கொழும்பில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் சீதா மாலினி (53), பாத்திமா பார்ஷனா (29), கல்யாணி லதா (42), விமலா (47), ரெஜினா (46) ஆகிய 5  பேரும் ஒரு குழுவாக சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்திருந்தனர்.அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது அதில் டீ இலை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் இருந்தன. அவை சென்னையில் உள்ள  உறவினர்களுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் கூறினர். ஆனால், அதை நம்பாத அதிகாரிகள் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

அதில், 5 பேரின் உள்ளாடைகளில் தங்க செயின்கள், கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும். பின்னர் அவர்கள்  அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில் இவர்கள் கடத்தல் குருவிகள் என்று தெரியவந்தது. மேலும், இதுவரை தங்கம் கடத்தலுக்கு ஆண்களை பயன்படுத்தி வந்த கும்பல் அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சுலபமாக சந்தேகம் ஏற்படுவதால்  தற்போது பெண்களை பயன்படுத்துவந்து தெரியவந்துள்ளது. எனவே 6 பெண்களை கடத்தலுக்கு பயன்படுத்திய கொக்கு யார் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,gang ,airport ,men ,Chennai ,Mafia , Chennai airport, 2 kg ,gold , mafia gang
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...