×

கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில்: ஜன.27ல் கும்பாபிஷேக விழா

கன்னியாகுமரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில், விவேகானந்தா கேந்திரா கடற்கரையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பூமிபூஜை 2013ம் ஆண்டு நடந்தது. தற்போது கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோயிலின் கீழ்த்தளத்தில் உள்ள அன்னதான மண்டபம், முடி காணிக்கை மண்டபம், அலுவலகம், சீனிவாச கல்யாண மண்டபம் போன்ற பணிகள் முடிந்து விட்டன. மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, மூலஸ்தான கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. வெங்கடாசலபதி பாதத்தில் பிரமோற்சவம் அன்று சூரிய ஒளி விழும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, முதன்மை பொருளாதாரத்துறை அதிகாரி பாலாஜி, அதிகாரிகள் சந்திரமோகன் ரெட்டி, ரவிசங்கர் ரெட்டி, ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் ஆகியோர் ேகாயில் கட்டுமான பணியை ஆய்வு செய்தனர். பின்னர் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். தற்போது பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி போன்ற பணிகள் நடந்து வருகின்றன. கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் குடியிருப்பு கட்டும் பணியை 6 மாதத்துக்குள் முடிவடைக்க நினைத்துள்ளோம். வரும் ஜனவரி 27ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடக்கும். அதற்கு முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirupathi Venkatachalapathy Temple ,Kanyakumari ,Kumbabishek Festival , Kanyakumari, Tirupathi Venkatachalapathy Temple, Kumbabishek Festival
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...