×

கஜா புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை : மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள ரூ.15,000 கோடி போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கஜா புயல் நிவாரணத்திற்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கி  உடனடியாக நிவாரண பணியில் ஈடுபட கூடிய ஒரு சூழ்நிலையை மத்திய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு தொடர்ந்து அழுத்தமாக மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை, சுற்றுப்பயணத்தில் ஒய்வு கிடைத்தால் தமிழகத்தில் வந்து புயல்சேதத்தை மோடி பார்வையிடுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

கஜா’’ புயல் தாக்கி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும், இன்னும் சில இடங்களுக்கு நிவாரண உதவியே கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி  டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக புனரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கையை ஏற்று, மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (23-11-2018) இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தனர். பின்பு 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

பின்பு முதற்கட்ட ஆய்வாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றது. இரண்டாவது நாளாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றனர். அங்குள்ள புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  அதன் பிறகு கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை தயார் செய்து நவ., 27 க்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிக்கையில் கூறி உள்ளபடி மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசுக்கான நிதியை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள ரூ.15,000 கோடி போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,storm ,Central Government ,Ghaz , Gajah Storm, Relief Fund, Central Government, Request, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...