×

கஜா’ புயல் காரணமாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு மண்பாண்ட சூளை அமைக்க அரசு ரூ3 லட்சம் நிதி வழங்க கோரிக்கை

சென்னை: கஜா’ புயல் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. மண்பாண்ட சூளை அமைக்க தமிழக அரசு ரூ3 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 16ம் தேதி தாக்கிய கஜா புயல் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மாவட்டங்களில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் தான் அதிகம் சேதம் அடைந்துள்ளதாக பரவலாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஆனால், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான தொழிலான மண்பாண்ட தொழில் விளங்கி வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாராகும் மண்பானைகள் உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்தான் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கஜா புயல் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மண்பாண்ட சூளைகள், மண்பானைகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் குமார் கூறும்போது, “கஜா புயல் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்கள் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறோம். பொதுவாக புயல் சேதம் குறித்த தகவல்களை சாலையோரம் உள்ள பகுதிகளே அதிகமாக சேதம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உள்பகுதிதான் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமே மண்பாண்ட தொழில்தான். இதில் சுமார் 10 ஆயிரம் மண்பாண்ட சூளைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த மண்பாண்ட சூளை அமைக்க மட்டும் ரூ2 லட்சம் செலவாகும். தற்போது இந்த புயல் காரணமாக 10 ஆயிரம் மண்பாண்ட சூளைகளும் தரைமட்டமாகி விட்டது.

அதேபோன்று, பொங்கல் பண்டிகைக்காக செய்து வைத்திருந்த மண்பானைகள், அடுப்பு உள்ளிட்டவைகள் உடைந்து விட்டது. அப்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ1 லட்சம் சேதம் ஏற்பட்டு இருக்கும். எங்கள் குடிசை வீடுகளும் காற்றில் காணாமல் போய்விட்டது. ஆனால் தமிழக அரசு குடும்பத்துக்கு தலா ரூ5 ஆயிரம் மட்டுமே நிவாரணம் அளிப்பதாக கூறி உள்ளது. இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. மீண்டும் மண்பாண்ட சூளை அமைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ2 லட்சம் மற்றும் மண்பானை சேதத்துக்கு ரூ1 லட்சம் என ரூ3லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Kajan , 50,000 workers, 3 lakh ,calorous furnace,Kajan storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...