×

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6வது தங்கம் வென்று மேரி கோம் சாதனை

நியூடெல்லி : இந்திய தலைநகர் டெல்லியில் 10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் லைட் பிளைவெயிட் 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒஹோடாவை சந்தித்தார். துவக்கம் முதலே அபாரமாக செயல்பட்டார் மேரி கோம். இவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹன்னா திணறினார். மூன்று சுற்று முடிவில் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த 35 வயது நிறைந்த மேரி கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர்.  அவர் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ளார்.  தனது முதல் தங்க பதக்கத்தினை 16 வருடங்களுக்கு முன் வென்றார். இறுதியாக 2010ம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஆறாவது தங்கத்தை (2002, 05, 06, 08, 10, 18) வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக, 6 தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முதலில் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.  உங்களது அன்பு மற்றும் ஆதரவால் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தகுதி பெற முடிந்தது. அதில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் இன்னும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mary Kom ,boxing competition ,women , World Women's Boxing, 6th Gold, Mary Kom, Adventure
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது