×

ஜி20 மாநாட்டில் டிரம்ப்-ஜின்பிங் சந்திக்கும் போது வர்த்தக போருக்கு தீர்வு ஏற்படும் : சீனா நம்பிக்கை

பீஜிங்: ஜி20 மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, இரு நாடுகள் இடையே நிலவும் வர்த்தக போருக்கு தீர்வு காணப்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, அதிபர் டிரம்ப் ஆண்டுக்கு 250 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வரி விதித்தார். இதனால் கோபம் அடைந்த சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆண்டுக்கு 110 மில்லியன் டாலர் வரி விதித்தது. இந்த வர்த்தக போரால் இரு நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் நகரில், வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜி20 மாநாடு வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இதில், ஜின்பிங்-டிரம்ப் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ‘‘ஜின்பிங்குடனான சந்திப்புக்கு தயாராக இருக்கிறேன். வர்த்தக போருக்கு தீர்வு காண சீனா விரும்புகிறது. முடிந்தால், அதை செய்வோம்’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த சீன வர்த்தகத்துறை இணை அமைச்சர் வாங் சோவென், ‘‘உலக வர்த்தகம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும் இருதரப்பும் பயனடையும் வகையில் பரஸ்பர மரியாதையுடனும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பிரச்னைக்கு தீர்வு காணும் என நம்புகிறோம்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trading war ,summit ,G20 ,China , Trading war, Trump-Jinping meets , G20 summit,China believes
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு