×

10 ஆயிரம் மரங்களை காவு வாங்கியது ‘கஜா’ : நிலச்சரிவு அபாயத்தில் கொடைக்கானல்

கொடைக்கானல்: கொடைக்கானல் வனச்சரகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை கஜா புயல் காவு வாங்கியுள்ளது. ‘அதிகமான மரங்களை இழந்துள்ளதால் கொடைக்கானல் பகுதியில் இனிமேல் அடிக்கடி நிலச்சரிவு வரலாம், மழை குறையும் மேலும் கொடைக்கானலின் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படலாம்’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலைச்சாலைகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், 200 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து, மின்விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்ததால், கஜா புயல் பாதிப்புகளில் இருந்து தற்போது கொடைக்கானல் பகுதி மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. மலைச்சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதால் கொடைக்கானலுக்கும், கொடைக்கனாலில் இருந்து மலை கிராமங்களுக்கும் பஸ்கள், கனரக வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. புயலால் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை பொருத்தும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. இதனால் மின்விநியோகமும் ஓரளவு சீராகி வருகிறது போளூர், கிளாவரை, பேத்துப்பாறை, கணேசபுரம் உள்ளிட்ட ஒரு சில மலை கிராமங்கள் மட்டும் இன்று வரை மின்சப்ளை துண்டிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளன. 8 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாமால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதியில் உள்ளனர். மின்தடை நிலவி வரும் பகுதிகளில் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கார், சரக்கு வாகனங்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றிக் கொண்டு, அவ்வப்போது செல்போன்களை உயிர்ப்பித்து வருகின்றனர்
புயலின் காரணமாக கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இப்பகுதியில் விழுந்த ராட்சத மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டதால் நேற்று முதல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

கொடைக்கானல் வனச்சரகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை கஜா புயல் காவு வாங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளதால், கொடைக்கானலில் இனிமேல் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபாய மணி அடித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மலைப்பகுதிகளில் மரங்களின் வேர்கள்தான் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டன. இதனால் கொடைக்கானல் வனச்சரக பகுதிகளில் இனிமேல் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் கொடைக்கானல் பகுதியில் மழையளவும் குறையும். சீதோஷ்ண நிலையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். கொடைக்கானலின் வெப்பநிலை கூடும். இழந்த மரங்களின் எண்ணிக்கையை ஈடு கட்டும் வகையில் புதிய மரங்களை உடனடியாக நடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கவலை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறுகையில், ‘‘கொடைக்கானல் வனச்சரகத்தில் சுமார் 7 ஆயிரம் மரங்கள் புயலால் அடியோடு விழுந்து விட்டன. இதனை சிறப்புக்குழு மூலம் கண்காணித்து வருகிறோம். மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்படாத வண்ணம் சிறப்பு ஆய்வு நடத்துகிறோம். சாலையில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டதால் வனப்பகுதி சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதி, மரங்களை அகற்றியவுடன் விரைவில் திறக்கப்படும்,’’ என்றார்.


மின்சப்ளை குறித்து கேட்ட போது கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறுகையில், ‘‘பூண்டி கிராமத்திற்கு 6 நாட்களுக்கு பின் நேற்று மின்விநியோகம் செய்யப்பட்டது. போளூர், கிளாவரை, பேத்துப்பாறை பகுதிகளுக்கு 2 நாட்களில் மின்விநியோகம் செய்யப்படும். சீரமைப்பு பணி தாமதமாவதற்கு சாலைகளில் விழுந்த மரங்கள், மின்கம்பங்களின் பெருத்த சேதம் போன்றவையே காரணம்,’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodaikanal , Kodaikanal, Trees, Khaja Storm
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...