×

தேன்கனிக்கோட்டையில் யானை தாக்கி விவசாயி படுகாயம்

தேன்கனிக்கோட்டை: ஓசூரில் இருந்து விரட்டப்பட்ட 40 யானைகள், நேற்று முன்தினம் நார்ப்பனட்டி கிராமத்துக்குள் புகுந்தன. அப்போது யானை தாக்கியதில், தோட்டத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக 40 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த  யானைகள் பென்னிக்கல், சானமாவு, புதுச்சேப்பள்ளி, ராமாபுரம்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை  சேதப்படுத்தி வந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டியதால், இந்த  யானைகள் தேன்கனிக்கோட்டை  வனப்பகுதி பேவநத்தம் பகுதிக்கு வந்தன.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை  வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட  வனத்துறையினர், யானை கூட்டத்தை மரக்கட்டா வனப்பகுதி வரை  விரட்டிச் சென்றனர். அப்போது, பல பிரிவுகளாக பிரிந்த யானைகள், நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அருகே நார்ப்பனட்டி கிராமத்திற்கு  சென்றன. அப்போது, தனது தோட்டத்தில் காவலுக்கு இருந்த  ஆவலப்பா மகன் மாதப்பன்(45) என்பவர், யானை கூட்டத்தில் சிக்கினார்.  

அதில் ஒரு யானை, அவரை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர்  தப்பிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வனத்துறையினர் யானை  கூட்டத்தை ஒன்றிணைத்து பேவநத்தம் வனப்பகுதி அருகே சூரப்பன்குட்டை  பகுதிக்கு விரட்டினர். ஏற்கனவே அங்கு 10 யானைகள் முகாமிட்டுள்ள  நிலையில், நேற்று காலை 40 யானைகளும் சூரப்பன்குட்டை பகுதியில்  தஞ்சம் அடைந்தன. நேற்று மாலை இந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஒற்றை யானையால் பீதி

ஓசூரில் இருந்த 40 யானைகள் தேன்கனிக்கோட்டைக்கு விரட்டப்பட்ட நிலையில், ஒற்றை யானை மட்டும்  ஆழியாளம் பகுதியில் சுற்றி வருகிறது. கடந்த 3 நாட்களில், இந்த  யானை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அச்சத்தில் உள்ள விவசாயிகள், ஒற்றை யானையை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Denkenikottai, elephant, farmer
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...