×

ஆதிமனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் நிறைந்த சிவகளை பகுதியில் அகழாய்வு அரசுக்கு தொல்லியல்துறை பரிந்துரை

ஏரல்: ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் நிறைந்துள்ள சிவகளை பகுதியில் முறைப்படி அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசுக்கு  தொல்லியல் துறை பரிந்துரைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிவகளை கிராமத்தில் ஆதிகால  மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு தடயங்களையும், தொல்பொருட்களையும்,  இடைகற்கால கருவிகளையும் வைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்  பள்ளி வரலாற்று ஆசிரியரும், சிவகளை பகுதியில் ஆராய்ச்சி செய்பவருமான மாணிக்கம் கள ஆய்வு மேற்கொண்டு கண்டெடுத்தார். தவலறிந்த தமிழக தொல்லியல்  அலுவலர்கள் லோகநாதன், பிரசன்னா மற்றும் இந்திய தொல்லியல்துறை அலுவலர்  பிரசன்னா ஆகியோர் சிவகளை பரம்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் தமிழக  தொல்லியல் துறையில் இருந்து சிவகளை மாணிக்கத்திற்கு வந்த  கடிதத்தில்  கூறியிருப்பதாவது; ‘சிவகளையின் வடமேற்கு பகுதியில் முன்பு தாமிரபரணி ஆறு  ஓடிய பகுதியருகே உள்ள பரம்புப் பகுதியில் ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர்  நிலப்பரப்பில் முதுமக்கள் தாழிகள் எச்சங்கள் பரந்து  காணப்படுகின்றன. பொதுமக்களால் செம்மண்  சரல்கள் வெட்டி எடுத்துள்ளதால் பல இடங்களில் தாழிகள் ஆங்காங்கே  சிதறி கிடக்கின்றன. இதுபோன்ற தாழிகள் வைக்கப்பட்டிருந்த சுடுமண்ணாலான  மட்கலயங்கள், தாங்கிகள், இரும்பிலான கத்தி, வாள், லாடம், அம்பு  முனைகள் மற்றும் தாழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எழும்பு பகுதிகள் போன்றவை  காணப்படுகின்றன. இது இரும்புகால மக்களின்  இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கத்தை வெளிப்படுத்துகிறது.

எனவே இப்பகுதியை அகழாய்வு செய்வதன் மூலம் இரும்புகால மக்களின் பெருங்கற்கால  பண்பாட்டினை வெளிகொண்டு வரலாம்.
இப் பகுதியில்  பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுத்து அழித்துள்ளனர். மின்வாரியத்தினர்  துணை மின் நிலையங்களையும், தார்  சாலைகளையும் அமைத்துள்ளனர். மீதமுள்ள பகுதிகளில் இருக்கும்  முதுமக்கள் தாழிகளை அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State ,area ,saints ,Shiva , Archaeological Survives, Archaeological Survey, Archeology
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...