×

சேலம் கோர்ட் வளாகத்தில் கைதி தற்கொலை மிரட்டல்: 2 மனைவிகள் கடும் மோதலால் பரபரப்பு

சேலம்: சேலம் அருகே மல்லூரை சேர்ந்தவர் சுப்ரமணி (எ) கபாலி (30). இவர்  மீது 13 வழிப்பறி, ஆடு வியாபாரியை கூலிப்படையாக சென்று கொலை செய்தது ஆகிய வழக்குகள் உள்ளது. 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரை நேற்று சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 2 போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வரும்போது, நீதி தேவதை சிலை அருகே திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவரது கையில் பிளேடும் இருந்தது.
‘‘என்னை இங்கிருந்து தூக்கினால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன்’’ என கபாலி மிரட்டினார்.

இதை பார்த்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அங்கு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல போலீசார் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கையில் பிளேடை வைத்துக்கொண்டு மிரட்டினார்.  அப்போது அங்கு வந்த அவரது முதல் மனைவி ஷியாமளா, ‘‘இப்போது இந்த இடத்தில் இருந்து நீ கிளம்பவில்லை என்றால், சிறையில் இருந்து வெளியே வர முடியாதபடி செய்து விடுவேன். உடனடியாக எழுந்து வா’’  என்றார். அந்நேரத்தில் மற்றொரு இளம்பெண் அங்கு வந்து நான் கபாலியின் 2வது மனைவி தவமணி (19) என்று கூறி, ஷியாமளாவுடன் கடும் மோதலில் ஈடுபட்டார். ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.

அப்போது கைதி கபாலி,‘‘போலீசார் என் காலை உடைத்துவிட்டு தவறி விழுந்ததாக சொல்கின்றனர். எனது 2வது மனைவியை அடித்து துன்புறுத்தியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்’’ என்று கூறி, தவமணியின் கையை பிடித்து இழுத்து உட்காருமாறு கூறினார். சிறிது நேரத்துக்குப்பின் போலீசார் கபாலியை சமாதானப்படுத்தி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற வராண்டாவிலும் 2 பெண்களும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். ‘‘எனக்கு ஒரு நியாயத்தை சொல்லிவிட்டு செத்துபோ’’ என ஷியாமளா கபாலியை பார்த்து கூறினார்.

2வது மனைவியும் ‘எனக்கும் ஒரு பதிலை சொல்லு’’ என்றார். 2 பெண்களுக்கு நடுவில் சிக்கிய கபாலி எதுவும் பேச முடியாமல் நின்றிருந்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து  தவமணி கூறும்போது, ‘கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனக்கு பெற்றோர் இல்லை. இப்போது நான் அனாதையாக இருக்கிறேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prisoner ,premises ,Salem Court ,wives , Salem Court, Prisoner, Suicide Threat, 2 Wives
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...