×

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த கவர்னருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார்குடி: கோட்டூர் ஒன்றியத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த கவர்னருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை, கோட்டூர் பகுதிக்கு வந்தார். கவர்னருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் வந்தனர்.  முன்னதாக, மன்னார்குடி அருகில் உள்ள தட்டான்கோயில், காசங்குளம், சேரி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

 கோட்டூர் சண்முகா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரிடர் முகாமில் தங்கியிருந்த மக்களை நேரில் சந்தித்து சேத விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து திருப்பத்தூர், குமாரமங்கலம், ராயநல்லூர், கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார்.  கோட்டூர் அருகில் மேட்டுப்பாளையம் மற்றும் பள்ளங்கோயில் ஆகிய இரு கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் சாலையின் இரு ஓரங்களிலும் திரண்டிருந்தனர். ஆனால், கவர்னர் மக்களை சந்திக்காமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2 கிராமங்களிலும் கவர்னரின் பின்னால் அணிவகுத்து சென்று அதிகாரிகளின் கார்களை மடக்கி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதிகாரிகள், பொதுமக்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முகாமில் மக்களை சந்தித்தார். அப்போது கதறி அழுத பெண்ணை சமாதானப்படுத்தி கண்ணீைர துடைத்துவிட்டார். பின்னர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நிவாரண பொருட்களை பார்வையிட்டார். பிறகு அந்தோணியார் ஆலயத்துக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, நாங்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் ரோட்டில் நிற்கிறோம். எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என பொதுமக்கள் கூறினர். மேலும், பட்டுக்கோட்டை பயணியர் மாளிகையில் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொது செயலாளர் ரங்கநாதன் கோரிக்கை மனு அளித்தார்.

அதில், `ஒரு தென்னை மரத்துக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். அழிந்துபோன தென்னை மரங்களை அப்புறப்படுத்தி நிலத்தை பண்படுத்த முதல்கட்ட நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,areas ,Tiruvarur district ,Kodur , Tiruvarur district, Kothoor, Governor and civilians
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...