×

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று 2வது டி20 போட்டி: அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், வெறும் 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்க உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க, இப்போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கோஹ்லி தலைமையில் கடைசியாக நடந்த 7 இருதரப்பு டி20 தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 8வது தொடரை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு அடுத்த 2 போட்டியிலும் வெற்றி கட்டாயமாகிறது. மெல்போர்ன் மைதானமும் பிரிஸ்பேனைப் போலவே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். எனவே, அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மேனான அனுபவமற்ற குருணல் பாண்டியா பிரிஸ்பேனில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மோசமாக செயல்பட்டார். 4 ஓவர்களை வீசிய அவர் 55 ரன்களை வாரி வழங்கினார். அதில் 6 சிக்சர்களும் அடங்கும்.

பேட்டிங்கிலும் அவர் வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதனால் இவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதே போல, பேட்டிங்கில் கே.எல்.ராகுலின் ஆட்டமும் நிலையானதாக இல்லை. கடந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20ல் 101 ரன் விளாசிய அவர், அதன் பின் 6 போட்டிகளில் ஒன்றில் கூட 30 ரன்னை கடக்கவில்லை. இதனால், மணிஷ் பாண்டேவை களமிறங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதல் போட்டியில் கடைசி கட்டத்தில் தான் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால், அதிக மாற்றங்கள் எதிர்மறை விளைவை தரும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதுகுறித்தும் அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பிரிஸ்பேனில் தோல்வியை தொடர்ந்து, தவறுகளை திருத்திக் கொள்வோம் என கேப்டன் கோஹ்லி பேட்டி தந்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் வென்றதால் ஆஸ்திரேலியா மனதளவில் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளது. எப்படியும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.20  மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கலீல் அகமது, ஜஸ்பிரித் பூம்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்டியா, ரிஷப் பன்ட், லோகேஷ் ராகுல் (வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே).
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் ஏகார், ஜேசன் பெஹரண்டார்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்நைல், கிறிஸ் லின், பென் மெக்டெர்மாட், கிளென் மேக்ஸ்வெல், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா.

மீண்டும் மழையா?
முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதுவும் ஒருவகையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 20 ஓவர் போட்டியாக இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இப்படிப்பட்ட நிலையில், மெல்போர்னில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியிலும் மழை, இந்திய அணியை வஞ்சித்து விடாமல் இருக்க வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tournament ,T20 ,India ,Australia , India - Australia, 2nd T20 match,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி