×

சுவிட்சர்லாந்து பெண்ணிடம் வெளிநாட்டு கரன்சிகள் பறிப்பு

சென்னை: சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பெண் பயணியிடம் 3,500 அமெரிக்க டாலர், 2 ஆயிரம் சுவிட்சர்லாந்து நாட்டு  பவுண்ட் ஆகியவற்றை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் பால் கரோல் (28). இவர், கடந்த வாரம் தமிழகத்திற்கு சற்றுலா வந்தார். பின்னர், அவர் மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு தி.நகரில் தங்கி உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தார். பாண்டிபஜாரில் இருந்து தியாகராய சாலை அருகே செல்லும் போது ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த பைக் கொள்ளையர்கள் இரண்டு பேர், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பால் கரோலியின் கைப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டனர்.

இதுகுறித்து பால் கரோல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கொள்ளையர்கள் பறித்து சென்ற பையில், சுவிட்சர்லாந்து நாட்டு 2 ஆயிரம் பவுண்ட், 3,500 அமெரிக்கா நாட்டு டாலர், இந்திய பணம் ரூ.5,000 மற்றும் விசா மற்றும் வங்கி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த தியாகராய சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், சந்தேகத்தின்பேரில் பால் கரோல் பயணம் செய்த ஆட்டோ டிரைவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பயணியிடம் வழிப்பறி சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மணலியில் ரூ.10 லட்சம் கேட்டு இன்ஜினியரை கடத்திய மணலியை சேர்ந்த ஜேம்ஸ் (33), வினோத் (32), மணிகண்டன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து, திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் கிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
* மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் மாநகர பஸ்சில் இருந்து இறங்கிய  அமைந்தகரையை சேர்ந்த வரலட்சுமி (35), என்பவரிடம் கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்க செயினை பறித்த திருச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் ஈஸ்வரி (30), முத்துமாரி (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
* சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சூசையப்பர் பட்டிணத்தை ேசர்ந்த ஜேசுராஜ் (45), மணலி செல்வராஜ்(44), புளியந்தோப்பு ரமேஷ்பாபு (எ) நாய் ரமேஷ் (34), மாதவரம் ரஞ்சித்குமார் (எ) ரஞ்சித் (32), செங்குன்றம் அரவிந்த்குமார் (34) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
* செங்குன்றத்தில் பைக்கில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சோழவரம் கும்முனூர் பாரதியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* வேளச்சேரி லட்சுமிநகரில் குணசேகரன் (33) என்பவருடைய வீட்டிற்குள் நுழைந்து 5 சவரன் நகை திருடிய தரமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பிதுரை (19) என்பவனை போலீசார் கைது செய்தனர்.
* மது வாங்கி கொடுக்காததால், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்தியசீலன் (50) என்பவனின் இடது கை, சுண்டு விரலை கடித்து துப்பிய அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த இருதயராஜ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஓடும் பஸ்சில் கத்திமுனையில் வழிப்பறி
வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து கோயம்பேடுக்கு நேற்று மதியம் மாநகர பஸ் (த.எ.46ஜி) சென்று கொண்டிருந்தது. புளியந்தோப்பு நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, 3 வாலிபர்கள் அதில் ஏறினர். பஸ் புறப்பட்டதும், திடீரென ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து நிறுத்தாமல் போக வேண்டும் என கூறினார். மற்ற 2 பேர், கண்டக்டரிடம் கத்தியை காட்டி மிரட்டினர். புளியந்தோப்பு ஆட்டு தொட்டி அருகே பஸ் சென்றபோது, கண்டக்டரிடம் இருந்த பணப்பையை பறித்தனர். பின்னர், 3 பேரும் தப்பிவிட்டனர். புகாரின்பேரில், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த புளியந்தோப்பை சேர்ந்த மகிமை (எ) மகிமை ராஜி (25) அதே பகுதி வஉசி அபிமன்யு (20), ஜெஜெ நகரை சேர்ந்த பாக்கியம் (எ) பாக்கியராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swiss , Swiss woma,n foreign currency,
× RELATED ஸ்விஸ்-க்கே டஃப் கொடுக்கும்...