×

வேலியே பயிரை மேய்ந்த கதை… கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை விட்ட அதிகாரிகள்

* மழைநீரை அகற்ற வழியில்லாததால் கரையை உடைத்த கொடுமை
* பொதுமக்கள் எதிர்ப்பால் ஓட்டம்

அம்பத்தூர்: பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி மாநகராட்சி அதிகாரிகள் கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து, கழிவுநீரை வெளியேற்றினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உடைத்த ஏரிக்கரையை சீரமைத்தனர். அம்பத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அதிகளவு மழை பெய்ததால் அம்பத்தூர் பகுதிகளான கருக்கு, இ.பி.காலனி, டி.டி.பி காலனி, ஞானமூர்த்தி நகர் விரிவு உள்ளிட்ட பகுதி தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளை சூழ்ந்து நின்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜூ தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மழைநீருடன் கலந்த கழிவுநீரை வெளியேற்ற, கொரட்டூர் ஏரிக்கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனர். இதனால், அப்பகுதியில் தேங்கி நின்ற கழிவுநீர் முழுவதும் ஏரிக்குள் சென்றது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ‘‘ஏரியில் கழிவுநீரை விடக்கூடாது என்று 2016ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் தடை உள்ளது. அதை மீறி எப்படி கழிவுநீரை வெளியேற்றலாம்,’’ என மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பால் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர், இதுபற்றி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி பொறியாளர் பாபு தலைமையில் ஊழியர்கள் அங்கு வந்து, உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைத்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஒன்றரை  ஆண்டுக்கு முன்புதான் ரூ.60 கோடி செலவில் கொரட்டூர் ஏரியை சீரமைத்து கரைகளை  பலப்படுத்தினோம். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஏரிக்குள் கழிவுநீர்  செல்லும் கால்வாயை மண்கொட்டி அடைத்து வைத்து இருந்தோம். ஆனால் மாநகராட்சி  அதிகாரிகள் கரையை வெட்டி கழிவுநீரை ஏரிக்குள் விட்டுள்ளனர். இதுபற்றி  பொதுப்பணித் துறையிடம், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித அனுமதியும்  வாங்கவில்லை. கடந்த ஆண்டும் மாநகராட்சி அதிகாரிகள் இதேபோல் ஏரிக்கரையை வெட்டி  கழிவுநீரை உள்ளே விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல்  அனுப்பி உள்ளோம்,’’ என்றார்.

விரைவில் வழக்கு
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக சீரமைக்கவில்லை. இதனை சீரமைத்ததாக கூறி பொய் கணக்கு எழுதி பல லட்சம் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர். மழைநீர் கால்வாய்களை முறையாக சீரமைத்து இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்க வழியில்லை. இதனை செய்யாமல் கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து கழிவுநீருடன் கலந்த மழைநீரை உள்ளே விட்டு மாசடைய செய்துள்ளனர். இச்செயல் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் மீறியதாகும். இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,Korattur , Offshore, Korattur lake
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு