×

ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பேரணியில் பங்கேற்பு எதிர் மனுதாரராக அமைச்சரை சேர்க்குமாறு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நவ. 10ல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் டூவீலர்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினர். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற ஐகோர்ட்டின் உத்தரவை மீறி நடந்துள்ளனர். அமைச்சர் மீது இலுப்பூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியது குற்றம்.

மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையிலான அதிமுவினர் 200க்கும் மேற்பட்டோர் நவ. 8ல் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில், உரிய அனுமதியின்றி மதுரையில் தியேட்டர் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிளக்ஸ் உள்ளிட்டவற்றை கிழித்து பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். இதனால், போக்குவரத்து பாதித்தது. எம்எல்ஏவின் செயல் சட்டவிரோதம். இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இந்த மனுவில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனு செய்யும்படி கூறி விசாரணையை டிச. 3க்கு தள்ளி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hon'ble Minister , HC notice, Hon'ble Minister
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது