×

கஜா புயலுக்கு 5 ஏக்கர் தென்னந்தோப்பு நாசம் தஞ்சை விவசாயி விஷம் குடித்து தற்கொலை

ஒரத்தநாடு: கஜா  புயல் தாக்கி 5 ஏக்கர் தென்னந்தோப்பு அடியோடு அழிந்ததால்  வருமானம் இழந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது  விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால்  நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு பகுதி,  தென்னந்தோப்புகளை கொண்டது. இங்கு கஜா புயலால் 90 சதவீத தென்னை மரங்கள்   வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒரத்தநாடு  அடுத்த சோழகன்குடிகாடு  கிராமத்தை  சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(55). விவசாயி.  இவருக்கு  அம்சவல்லி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர்.  சுந்தர்ராஜனுக்கு சொந்தமாக 5 ஏக்கரில்  தென்னந்தோப்பு இருந்தது. இதில் 500  தென்னை மரங்கள் இருந்தன. மகனும், சுந்தர்ராஜனும் சேர்ந்து  தென்னை  விவசாயத்தை கவனித்து வந்தனர். இதன்மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்  கிடைத்து வந்தது. புயலால் 500 மரங்களும் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால்  சுந்தர்ராஜனின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இதுபற்றி, மனைவி, மகனிடம்,  தென்னை வருமானமே முற்றிலும் தடைபட்டுவிட்டது. இனி என்ன  செய்வது என்று  வேதனை தெரிவித்தபடி இருந்தார். இதற்கு, அவர்கள் ஆறுதல் கூறி உள்ளனர்.  இதனிடையே, ஒரு தென்னை மரத்திற்கு 1,100 (மரத்தை அப்புறப்படுத்த ரூ.600,  புதிய தென்னை நடவு  செய்ய 500) அல்லது ஒரு ஹெக்டேருக்கு 2 லட்சத்து  64 ஆயிரம் நிவாரணமாக  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி  சுந்தர்ராஜனுக்கு ரூ.5.5 லட்சம் நிவாரணமாக  கிடைக்கும். ஆனால், இந்த பணத்தை  கொண்டு புதிய தென்னை மரங்கள் வைத்து வளர்த்தால் வருமானம் கிடைக்க  குறைந்தது 5 வருடம் ஆகும். அதுவரை அவருக்கு வருமானம்  வர வாய்ப்பு இல்லை.  இதை நினைத்து அவர் பெரும் கவலை அடைந்தார். இந்தநிலையில்,  நேற்றுமுன்தினம் இரவு 8 மணி  அளவில் மனைவி, மகனிடம் சொல்லாமல் வீட்டை  விட்டு சென்றார்.  

பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மனைவி, மகன்  தேடிப்பார்த்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை,  ஊருக்கு  ஒதுக்குபுறமாக உள்ள சுடுகாட்டு பகுதியில் சுந்தர்ராஜன் விஷம்  குடித்து இறந்து கிடப்பதை விவசாயிகள் பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து மனைவி, மகன், உறவினர்கள் அங்கு சென்று சுந்தர்ராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து,  பாப்பாநாடு போலீசார் சடலத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். சுந்தர்ராஜனின் தற்கொலை சம்பவம்,  விவசாயிகளிடையே கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புயல் பாதிப்பு தற்கொலை 3 ஆனது

புயல்  சேதத்துக்கு ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையை சேர்ந்த  வைத்தியநாதன் (38), திருச்சி  மேலகொண்டையம்பேட்டையைச் சேர்ந்த விவசாயி  செல்வராஜ்(30) ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர். தற்போது, சுந்தர்ராஜனோடு இந்த  எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தென்னைக்கு வெறும் 600 அரசு அறிவித்ததால் விபரீதம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ரவீந்திரன் அளித்த பேட்டி: சோழன்கன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனின் 5 ஏக்கர் தென்னை மரங்கள், ஒரு ஏக்கர் தேக்கு மரங்கள் கஜா புயலில் முற்றிலும் அழிந்துவிட்டது. ஒரு வாரமாகியும் அதிகாரிகள் பார்க்க வரவில்லை. இந்நிலையில் ஒரு மரத்துக்கு ரூ.600 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஒரு தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம் அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் குறைந்ததொகையே அறிவித்ததால் சுந்தர்ராஜன் மன உளைச்சலில் இருந்துவந்தார். இந்நிலையில் அவரது சாவுக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் என அறிவித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சுந்தர்ராஜனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது வாரிசுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coca storm ,Tanjore ,suicide , 5 acres ,coca storm ,destroyed, suicide in Tanjore farm
× RELATED நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி